Tuesday, February 11, 2020

தாய்மையும் தமிழும்

மாலை மல்லிகை வாசம் வீச
மௌனத்தின் அழகில் நாசியுடன் பேச

அந்தி பொழுதின் செந்நிற கதிரும்
சற்றே மறைய இரவும் புலரும்

கனவுகளை கண்ணிலும் கண் காணா கடவுளை கருவிலும் சுமந்த படி நான் ...

உன் பிறப்பை நோக்கி நொடிகள் நகர
என் கருப்பையில் ஒரு கார்கில் போர்

மரண பாதையில்  நினைவுகள் செல்ல
மரிக்கும் நொடியை விதியால் வெல்ல

நான் பிறக்க  நீ  இறப்பதோ என்பது போல்
ஆறுதலாய் ஒரு அழு குரல்.

குரல்  கேட்ட  திசை  நோக்கி
தசை  எல்லாம் பயணிக்க
வழிந்தோட வழியற்று விழிநீர் தத்தளிக்க

தண்ணீர் குடம் உடைத்து நான் வந்தது
உன் தன் கண்ணீர் ஏந்தவே என்பது போல்

என் கண்மணியின் கன்னத்தில்
துளி ஒன்று சிதறி விழ,
என் இடபக்கத்தில் இறைவனை கண்டேன்
உடலுக்கு வெளியே இன்னொரு இதயத்தை கண்டேன்.

அந்த  நொடியில், நோகும் தேகம் சோகம் மறக்க
ஓராயிரம் உணர்வுகள் ...


கொடுங்கோடையில்  முதல் மழை தரும் இன்பமும்
கடுங்குளிர்கால  தேநீர் கோப்பையின்  இதமும்

கடற்கரை அலையின் முதல் ஸ்பரிசத்தில் விளையும் சிலிர்ப்பும்
விடை பெறும் காதலனனின் கடைசி முத்தம் தரும் ஏக்கமும்


அழகு தமிழ் கவிதை வரிகள் தரும் மகிழ்ச்சியும்
அதி காலை ஆலய மணியதன் சாந்தமும்


பெயரில்லா உயிரோவியமாய்
உனை கண்ட அந்த நொடியில் உணர பெற்றேன்.

இதழ் பிளந்து கதை பேச இப்பொழுது வழியில்லை
இருப்பினும் இதயம் பேசும் மொழிகள் இதோ ...

பெண்ணாக்கிய இறைவனுக்கும்
தாயாக்கிய என் தலைவனுக்கும்

இம்மண்ணுலகம் விடுத்து
விண்ணுலகம் அடையும் வரை
எண்ணில் அடங்கா நன்றிகள் பல  .!!!

No comments: