Tuesday, February 11, 2020

நல் வாழ்வு நல்கும் நம் கிராமங்கள்: ஒரு பயணம்

இந்தியாவின் பல நகரங்கள் அதி வேக நாகரீக வளர்ச்சியினாலும் மேற்கத்திய பழக்க வழக்கங்களினாலும் அசுர வேகத்தில் முன்னேறி வந்தாலும், அதன் உயிர் நாடி பசுமையும் , பாசமும், அழகும் , ஆழமும் சுரக்கும் அதன் கிராமங்களிலே உள்ளது.

கிராம வாழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் தான். பெரு நிறுவன வருகையினால், பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியினாலும் சிறு முதல் பெரு விவசாயிகளின் வியாபார முறைக்கான நியதிகள் முற்றிலுமாக மாற்றி அமைக்க பட்டுள்ளன. விளைவாக மண்ணை கிண்டி வாழும் மக்களின் உணவில் மண் விழுந்தது. ஏனோ விவசாயமும், அதை சார்ந்த வியாபாரங்களும் வருங்கால சந்ததியரின் வாழ்வு  மேம்பட உகந்ததாக இருக்காது என்ற நம்பிக்கை வலுக்க ,கிராமங்களில் இருந்து மக்கள் ஆண் பெண் வேறுபாடின்றி கூட்டம் கூட்டமாக நகரங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். வளர்ந்து வரும் விஞானமும், தகவல் தொழில் நுட்பமும் எளிதாக பொருளீட்டும் தன்மை வாய்ந்த வேலை வாய்ப்புகளும் காந்தம் போல் கிராம மக்களை ஈர்க்கின்ற சில காரணங்கள்.

பரந்து விரிந்த ஆலமரத்தின் உறுதி அதன் விழுதுகள் என்றாலும், ஆதாரம் அதன் வேரல்லவா ? அப்படி பட்ட வேரானது விவசாயம்.  அவ்விவசாயம் தழைத்தோங்கும் நம் அழகிய கிராமங்களில் ஒரு நாள் செலவழித்து நாம் ஈட்டிய வரவை நோக்கும் முயற்சியாகும் இப்பதிவு.

ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்வின் இன்றியமையாத தேவைகள் தான் என்ன ?? நம் நகரவாசிகளிடம் இக்கேள்வி முன் வைக்க பட்டால், "பேஸ்புக் ", "வாட்ஸாப்ப்", "ஸ்விக்கி",மற்றும் இன்ன பல ஆப்புகளின் பெயர்கள் பதிலாக  வந்தாலும் வரலாம். நாம் நிஜ தேவைகளை பற்றி அறிவோம். உண்ண உணவு, முக்கியமாக ஆரோக்கியமான, கலப்படமற்ற உணவு,சுவாசிக்க தூய்மையான காற்று, உடுத்த உடை, உறங்கவும், புழங்கவும் பாதுகாப்பான, சுகாதாரமான இடம்.

இதையெல்லாம் உணரும் இடம் ஒரு கிராமமாகவே இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டு, சூரிய கீற்று மலை வழியாகவும், கிளை வழியாகவும் நம் முகத்தை வந்தடைய ஓர் அதிகாலை வேலையில் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பிரவேசிப்போம்

பத்து வருடத்திற்கு முன்பு ஒரு கிராமத்துக்குள் நுழைந்தால் ஏற்படும் அனுபவத்தை போல் இது இல்லை என்றே எண்ண தோன்றுகிறது. நாகரீகத்தின் தாக்கம் அங்கும் இங்கும் தென்படவே செய்கிறது. ஆங்காங்கே ஸ்மார்ட் போன் வைத்து கொண்டு உலகையும் தன்னையும் மறந்து அமர்ந்திருக்கும் இளைஞ்சர்கள், கிராம மக்கள் தொகையின் தேவைக்கு அதிகமான இரு சக்கர வாகனங்கள்,வீதிக்கு ஒரு நான்கு சக்கர வாகனம், லேப்டாப், ஸ்மார்ட் போன்,ஏ சி போன்ற எந்திரங்களை விற்கும் கடைகள்  என நவீன வாழ்க்கை முறையின் சுவடுகள் தெரிகின்றன. இருப்பினும் சாணம் கரைத்த நீரை தெளித்து பாவாடை தாவணி அணிந்த பதினெட்டுகள் அரிசிமாவால் வீட்டு  வாசலில் கோலமிடும் காட்சி, " அம்மா பால் " என்று ஆழாக்கு ஏந்திய படி வீட்டின் முன் நிற்கும் பால் காரன், பம்பரம், கோலி , காத்தாடி போன்ற நகர் புறங்களில் காணக்கிடைக்காத விளையாட்டுகளில் மூழ்கி இருந்த சிறார்கள்,
கொடியில் பறித்த முல்லையை கூடையில் சுமந்து கொண்டு,தன் காட்டில் விளைந்த கத்திரியையும்,முருங்கையையும் மூட்டை கட்டிக்கொண்டு " என்னம்மா , இன்னைக்கு முருங்கக்கா கொழம்பு வைக்க கூடாதா ?"என்று உரிமையோடு கேட்கும் கறிகாய் விற்கும் பெண்ணின் தொனியும்
ஒரு கிராமத்துக்கே உரித்தான அடையாளங்களாக தென்பட்டது.




சிறிய குடிசையோ, பெரிய மாடிகளோ தனி தனியாக சாலையின் இரு புறமும் வரிசை கட்டி கொண்டு நின்றன. நல்ல வேலையாக அடுக்கு மாடி குடியிருப்புகளால் இன்னும் ஆக்கிரமிக்க பட வில்லை நம் கிராமங்கள்.

புதியவர்களை கண்டால், வியப்புடன் நோக்கும் கண்களே மிகுதியாகவும், சந்தேகத்துடன் நோக்கும் கண்கள் குறைவாகவும் காணப்படுவது கிராமங்களில் தான். அந்நியர்கள் என்றல் கதவு சங்கிலியின் பின்னால் இருந்து அணுகும் போக்கிற்கு மாறாக ,  என்ன யாரென்று விசாரித்து திண்ணையில் அமர வைத்து மோரும் நீரும் தரும் பங்கு நெஞ்சை தொடுகிறது.

"ஆல் ரோட்டஸ் லீட்  டு ரோம்" என்று ஆங்கில பழ மொழிக்கு ஒப்பாக, ஒரு கிராமத்தின் எந்த சாலையில் சென்றாலும் ,நம் பயணம் முடியும் இடம் ஒரு தோப்பாகவோ, வயல் வெளியாகவோ, அல்லது காடாகவோ தான் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி ஒரு பயணத்தில் சாலையின் இரு புறங்களிலும் வெவ்வேறு வகுப்பு மக்களுக்கான உணவு விடுதிகள் தென் படுகின்றன.


Flickr.com
வணிக வர்த்தக காரணங்களால் பிளாஸ்டிக் மயமாக்கப்பட்ட நம் நகர்ப்புற உணவு விடுதிகளில் இருந்து வெளிப்படையாக மாறுபடுவது, எங்கு நுழைந்தாலும் பளிச்சென்று நம் கண்களில் படும்  பசுமையான வாழை இலைகள்.  உள்ளூர் சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மூல பொருட்கள் தான் பயன் படுத்த படுகிறது என்ற காரணத்தால் கலப்பட உணவின் சதவிகிதமும் , நிகழ்தகவும் குறைவு.

மாலை புலர, சூரியன் மறைய, கிளைகளும் இலைகளும் சாமரம் வீச சில்லென்ற  காற்று உள் கூட்டை அடைய இனிதாய் நிறைவை நோக்கி நம் பயணம். 
மின்மினி பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் கொட்டி கிடப்பது போன்று, மின்சார விளக்குகள் பரவி இருக்கும் நகரங்களை போல் அல்ல கிராம இரவு. உழைத்த கூட்டம் களைப்பாற ,கால் நடைகள் இளைப்பாற , பொழுதுசாய உணவு முடித்து அரவம் ஏதும் இன்றி அடங்கி போகிறது பாதிக்கு மேற்பட்ட மக்கள் தொகை.

தமிழகத்தில் மட்டும் எண்ணிலடங்கா அழகிய கிராமங்கள் அரியலூர், கோயமுத்தூர், நெல்லை, கடலூர், தஞ்சை இன்ன பிற மாவட்டங்களிலும் இயற்கை அன்னையின் வரம் பெற்று வளமாக வாழ்கின்றன. அவ்வளங்கள் செழிக்க தழைக்க உதவ இயல வில்லை எனினும் அழிக்க முற்படும் சக்திகளுக்கு துணை போக வேண்டாம்.
ஆயிரம் கோடி பணம் பையில் இருந்தாலும், பசியாற நெல்மணி வேண்டும் என்னும் வாழ்வியல் எதார்த்தத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல் படுவோம்.

நம் கிராமங்கள் வளர, செழிக்க, கிராம மக்களின் வாழ்வு  வளம் பெற  நம்மால் இயன்ற முயற்சிகளை மேற் கொள்வோம் என சபதம் பூணுவோம்.

No comments: