Thursday, March 26, 2020

அப்பா



நடை வண்டி பழகிய நாள் முதல்
தடை தாண்ட கற்று கொடுத்து
விரல் பிடித்து வீதி கடக்கையில்
மடை திறந்த வெள்ளம் போல்
விடை இல்லா வினாக்களை நான் கேட்க
சிரிக்க சில பொய்களையும்
சிந்திக்க பல மெய்களையும்
கலந்து சமைத்து , சலிப்பின்றி கதைகள்
சொன்ன நாட்கள் வேண்டும்

ஜன்னல் வழி மின்னல் கண்டு
அச்சத்தோடு அழுத பொழுது
“அருகில் நானிருக்க அழுகையேன்”
என்றணைத்து ஆறுதலாய்
பெருகி வழிந்த விழி நீரை
துடைத்த நாட்கள்  வேண்டும்

உடன் பிறந்தோர் என்றும் அம்மாவுடன்
நான் மட்டும்  ஒன்றாய் உங்களுடன் உறங்க ,
உறக்கத்திலும் நெருக்கமானவள் நானே
என்று கர்வம் கொண்டு
கவிதையாய் கழிந்த இரவுகள் வேண்டும்

கவிதை படித்து ரசித்து மகிழவும்
கத்தி பிடித்து கத்திரிக்காய் நறுக்கவும்

துணிகளை கூட திருத்தமாய் துவைக்கவும்
துணிவுடன் துணையின்றி தனியாய் இயங்கவும்
அருவாள் கொண்டு மரத்தை வெட்டவும்
அறிவால் எதையும் எதிர்த்து வெல்லவும்
கற்று கொடுத்த நாட்கள் வேண்டும்

பருவம் வந்த நாள் தொட்டு
சற்றே விலக அம்மா சொல்ல
புரியாமல் பிரிந்த போதும்
பக்குவமான இணக்கத்துடன்
பண்பட்ட அணுக்கத்துடன்
அறிவின் முதிர்ச்சியுடன்
உறவு  பயணித்த
நேர்த்தியான  நாட்கள் வேண்டும்

மாலை சூடி மணம் முடித்து
சேலை நனைய கண்ணீர் சொரிந்து
கணவன் அகம் நோக்கி
பாதை மாறி பயணம் தொடர
துன்பமும் இன்பமும் ஒருசேர
அகம் வாழ்த்த முகம் வாட
“சென்று வா” ,என்று சொன்ன நொடியில்
பெண்ணாய் பிறந்ததை எண்ணி நொந்து
பிரிந்து சென்றேன் என் தந்தையை
கருவறை இல்லாத  இன்னொரு அன்னையை

காலத்தில் தொலைந்த நினைவுகளுடன்

கடற்கரை ஒர நடை பயணம்
கரை புரளும் கண்ணீர் பிரவாகம்



பின்னால் பார்த்தேன்
பாத சுவடு மறைய மறைய
வழியும் கண்ணீர் உறைய  கண்டேன்!!

முதிர்ந்த தந்தைக்கு முற்றாத உறவுக்கு
கவிதையால் ஓர் கண்ணீரஞ்சலி !

ஒரு கோடை விடுமுறையில்



படிச்சு படிச்சு சலிச்சு போச்சு
கண்ணு ரெண்டும் வலிச்சு போச்சு
முழு ஆண்டு பரீட்சை முடிச்ச முத நாலு


விடிய எந்திரிச்சு பேருக்கு பல்லு வெளக்கி
விடிய விடிய கண்ட கனா கண்ணுல நிக்க
அழுக்கான மூஞ்சிய அழுத்தி மட்டும் தொடச்சிக்கிட்டு
ஊற வெச்ச பழைய சோறு
புளிச்சு போன நீர் மோரு
ஊறுகாயின் சாறோட
ஒன்னா ஊத்தி ஒழுக ஒழுக கரைச்சு குடிச்சு

செருப்ப மறந்து ஓட்டம் எடுக்க
தெருவ கடக்க , தோப்ப கடக்க
பள்ளம் மேடு பாக்கல
பாதம் ஒன்னும் வலிக்கல

அடிச்சு புடிச்சு போயி சேந்தா
ஆத்தோரம் கூடிருச்சு அஞ்சாறு உருப்படி

கொண்டு வந்த காசை எல்லாம் கொட்டி பாத்து
எண்ணி முடிக்க கிட்ட கிட்ட வந்துருச்சு ரூவா அஞ்சு

சோள கதிரும் கடலையும்  வாங்க ஒன்னு
கலரும் கிழங்கையும்  கொண்டு வர ரெண்டு
போக , மத்ததெல்லாம் பாறையில் உக்கார
இல்லாத அடுப்ப கல்லால கூட்டி
சொப்புல சோறாக்கி
சொரட்டு ஓட்டுல கொழும்பு வெச்சு
ஆலம் இலையில பந்தி வெக்க
சமைக்காம பசியாற, நட்பால உசுரானோம்

புளியங்காய் உடைக்க கல்லு தேடி ஓட
பாழாபோன முள்ளு ஒன்னு கால குத்த
வலிய பாத்தா பங்கு போகும்னு
ஓடியாந்து வந்து உக்காந்து
உப்பு கல்லு ஒன்னு வெச்சு ,புளிய கொஞ்சம் சேத்து வெச்சு
நாக்குல வச்ச நொடி , காலு வலி மறந்து போச்சு


ஆத்துல காலு முழுக ,பாவாடை பாதி நனைய
ஆளுக்கொரு கிழங்கோட ,பிரியாம சேந்திருக்க
திட்டம் எல்லாம் போட்டோமே
""எல்லாரும் கல்யாணம் செஞ்சிகுருவோமா ?"
புரியாத வயசுல தெரியாம பேச
எது ஒன்னும் வேலைக்கு ஆகாம
நாளைக்கும் யோசிப்போம்னு ,
எதுவாகினும் பிரிய மாட்டோம்னு
ஆத்தையும் மரத்தையும்  சாச்சியாக்கி
உள்ளங்கை அடிச்சு சபதம் எடுத்து

பொழுதுசாய வீட்டுக்கு வர
பாவாடை காஞ்சு போச்சு
மனசு பூரா ஈரமாச்சு

சந்தோசமா தூங்கி போனேன்
எந்திருச்சு பாத்தா வருஷம் பல ஓடி போச்சு

விதி செஞ்ச சதியால
தெசைக்கொண்ணா  பிரிஞ்சு போனோம்


ஆல மரம் செத்து போச்சு
ஆத்து தண்ணி வத்தி போச்சு

உள்ளங்கை சூடும்
முள்ளு குத்தின சுவடும்
மட்டும் , அப்படியே ஒட்டி இருக்கு

கலை அரசி முருகேசன்