Tuesday, February 11, 2020

தமிழகத்தின் ஐம்பெரும் ஆலயங்கள்

தமிழ் மொழியின் அழகும் அடையாளமும் அதன் "ழ"கரம் . அது போல் தமிழகத்தின் அடையாளம் அதன் கோவில்கள் . வியக்கும்  விஞ்ஞானமும் மயக்கும் கலை நயமும் கொண்ட நம் கோவில்கள் நம் முன்னோரின், நம் மூதாதையரின் திறமை பெட்டகங்கள் என்றால் அது மிகையாகாது.  தமிழகத்தின் சிரத்தை அலங்கரிக்கும்  கிரீடமாம் நம் கோவில்களை  பற்றிய ஒரு பார்வை இது.  அந்த கிரீடத்தில் பதிந்துள்ள விலை மதிப்பற்ற மாணிக்கங்கள் போல் சில கோவில்கள் தனி சிறப்பு மிக்கவை.

  தமிழரின் அடையாளமாக கருதப்படும் கலாச்சாரமமும் ,அவர்களது வீரமும், பண்பாடும், வாழ்க்கைமுறையையும் பிரதிபலிக்கும் பிம்பங்களாகவே கோயில்கள் விளங்கின.  இக்காலம் போல் கோவில் பக்திமான்கள் மட்டும் செல்லும் ஒரு வழிபாட்டு நிலையமாக விளங்கியதில்லை, கோயில்கள் ஏழைக்கும் எளியவர்க்கும் உணவும் நீரும் வழங்கும் ஒரு தர்ம சத்திரமாக, போர் காலங்களில் அவசர தேவைக்கான உணவு தானியங்களையும் , பொற்காசுகளையும் பதுக்கி வைக்கும் பேழைகளாகவும், போர் ஆயுதங்கள் பட்டை தீட்டி பத்திரமாக பாதுகாக்கப்படும் பட்டறைகளாகவும் விளங்கின. இதன் காரணத்தால் தான் பண்டைய மற்றும் இடைக்காலத்தில் கட்டப்பட்ட அணைத்து கோவில்களுக்கும் அரண்மனைகளும் சுரங்கப்பாதை ஒன்று அமைக்க பட்டு இருந்தது.  இவ்வளவு முக்கியத்துவத்துடன் கட்டப்பட்ட கோவில்களில்  சில அற்புதமான கலை நயத்துடனும் அழகுடனும் வடிவமைக்க பட்டன. அவ்வகையில் தமிழகத்தின் கவனிக்க பட வேண்டிய ஐந்து  கோவில்களின் வரலாற்று சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.


ப்ரஹதீஸ்வரர் கோவில், தஞ்சை



ராஜ ராஜ சோழனால் சைவ மதம் தழைத்தோங்கிய காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுப்ப பட்ட கோவில் தஞ்சாவூரில் அமைந்திருக்கும் ப்ரஹதீஸ்வரர் கோவில். தமிழகத்தை ஆண்ட மன்னர்களுள் சோழ மன்னர்களின் கட்டிடக்கலை தனி சிறப்பு வாய்ந்தது. சோழரின் புகழையும் பெருமையையும் தனித்துவத்தையும் சமகால மக்களிடம் சேர்த்த பெருமை மதிப்பிற்குரிய  அய்யா கல்கி அவர்களையே சாரும். பொன்னியின் செல்வனையும் ,பார்த்திபன் கனவையும் படித்தவர்கள் யாராயினும் "நாம் அக்காலத்தில் பிறந்திருக்க கூடாதா"?" என்ற ஏக்கத்தை நிச்சயம் கடந்து சென்றிருப்பர். அப்பேற்பட்ட புகழ் கொண்ட சோழ குல மன்னனாம் ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். உலகிலேயே சன்னிதானத்தில் மிக பெரிய சிவன் சிலை கொண்ட கோவில் என்ற சிறப்பு இதற்கு உண்டு.


Tourmyindia.com
உலக வரலாற்று சின்னமாக விளங்கும் இக்கோவிலின் நிழல் தரையில் விழாது என்கிற நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அழைக்கப்பட்டது. சரித்திரத்திலும், தமிழனின் வளமான வாழ்க்கை முறையையும் அறிய விழையும் ஒவ்வொருவராலும் ரசிக்க பட வேண்டிய ஒரு வரலாற்று சின்னம் நம் தஞ்சை பெரிய கோவில்.

மீனாட்சி  சுந்தரேஸ்வரர்  கோவில், மதுரை





Gettyimages.com

மணக்கும் மல்லிகை வாசமும், மயக்கும் மொழி வளமும் கொண்ட மதுரை மண்ணில் உருவாக்கப்பட்ட அழகிய கோவில் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் அது மிகை ஆகாது. கோவில் எவரால் உருவாக்கப்பட்டது என்பதற்கு பல காரணங்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அழகிய சிற்ப வேலை பாடுகளுடன் காணப்படும் இக்கோவில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் கொண்டது. இத்தலத்தின் முக்கிய கடவுள்களாக  சிவனும் மீனாட்ஷி அம்மனும் விளங்குகிறாள்கள் . இக்கோவிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் தனி சிறப்பு வாய்ந்தது. மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களை எந்த கோணத்தில்  நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காணப்படுவது வியப்பானது. மதுரை செல்லும் யாவரும் மொழி இன வேறுபாடின்றி ரசிக்க வேண்டிய அழகிய நிலையம் மீனாட்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.

ஸ்ரீ ரங்கநாதர் கோவில் , ஸ்ரீரங்கம்




Thehindu.com


வைஷ்ணவ ஸ்தலங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது.  ஆழ்வார்கள் பாடிய நான்காயிரம்  திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற இக்கோவிலின் மூலவர் சயனிக்கும் வடிவில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் ஆவார். வைஷ்ணவ மதத்தினரால்  போற்ற படும் 108  திவ்ய தேசங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஸ்ரீரங்கத்தின் இந்த ஆலயம் ஆகும்.

கோவிலை சுற்றி ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு மதில் சுவர்கள் அமைந்துள்ளன. இவ்வேழு மதில் சுவர்களும் ஏழு உலகங்களாக கருதப்படுகிறது. சோழ மன்னர்களாலும், பாண்டியர்களால்,ஹொய்சலயர்களும் கொடைகள் பல வழங்கப்பட்டு , பேண பட்ட இக்கோவில் ஆழவார்களால் மிகுதியாக பாட பட்ட ஒன்றாகும். வளமான வரலாறும், அழகான கட்டமைப்பும் கொண்ட இந்த புனித ஸ்தலம் கட்டாயம் பார்த்து ரசித்து வியக்க வேண்டிய ஒரு இடமாகிறது.

ராமநாதன் ஸ்வாமி கோவில், ராமேஸ்வரம்

கடல் அலைகள் கவி பாட கரையோரம் அழகாய் அமைந்திருப்பது, ராமநாதபுர மாவட்டம், ராமேஸ்வரத்தின் ராமநாத ஸ்வாமி கோவில். இரு பெரும் இந்து புராணங்களுள் ஒன்றான ராமாயணத்தின் நாயகனான ராமன் , போரில் செய்த பாவங்கள் அகல சிவனை வேண்ட எண்ணி சிருஷ்டிக்கப்பட்ட லிங்கம் தான இது என்று தல வரலாறு கூறுகிறது.



wikipedia










உலகிலியே நீளமான பிரகாரங்கள் உள்ள கோவிலாக இது விளங்குகிறது. எனினும் 690 அடி நீளமும் 435 அடி அகலமும் 1212 தூண்களுடனும் காட்சி அளிக்கும் மூன்றாம் பிரகாரம் தனி பிரசித்தி பெற்றதாகும்.  இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாக இருப்பது இக்கோவிலின் மற்றும் ஒரு சிறப்பாகும். இத்தகைய பெருமைக்குரிய அம்சங்கள் கொண்ட ஆலயம் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பது வியப்பில்லைதானே ?

குமரி அம்மன் கோவில், கன்னியாகுமரி

முப்பெருங்கடல்கள் சங்கமிக்கும் , இந்திய தீபகற்பத்தின் அணையா விளக்காய் விளங்கும்  கன்னி தெய்வமாம் குமரி அம்மன் வீற்றிருக்கும் அழகிய கோவில் தான் குமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குமரி அம்மன் கோவில். சிவ பெருமானை மணக்க எண்ணி ஆவலுடன் காத்திருக்க, அது நடவாமல் போக, கன்னியாகவே  இருந்து விடும் முடிவெடுத்து பாணாசுரனை வதம் செய்தாள் கன்னி அம்மன் என்று  வரலாற்று சுவடுகள் விளக்குகின்றன.




Onlinekanyakumari.com

தேவியின் பாத வடிவில் அமைந்துள்ள பாறையின் மீது சுவாமி விவேகானந்தர் ஞானோதயம் பெற்றமையால் அப்பாறை விவேகானந்தர் பாறை என்றும் அழைக்க படுகிறது.  மேற்கூறிய காரணங்களால் தமிழகத்தின் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக இது இடம் பெறுகிறது.



நம் பழம் பெரும் கோவில்கள் , நம் முன்னோர்களின் கல்வி, வாழ்க்கை முறை, ஒழுக்கம், மொழி பற்று , கலாச்சாரம் போன்ற பண் முகங்களை அறிந்து கொள்வதற்கான எளிதான வழியாகும். தெய்வ வழிபாட்டை கடந்து சரித்திரத்தில் நீங்கா  இடம் பிடித்த நம் முன்னோரை போற்றுவோம், அவர்தம் உருவாக்கிய பொக்கிஷங்களை பாதுகாப்போம்.

No comments: