Sunday, February 25, 2024

 

கார்மேகம் கண்ணீர் வடிக்கிறது

 

கருவானவள்  உயிரானேன் ; களிப்படைந்தர்.

உயிரானவள் உருப்பெற்றேன் ; உற்சாகமடைந்தர்

உருப்பெற்றவள் உலகம் காண வந்தேன் .

 

"மகளே வா! மஹால்டஷுமியே  வா!“ உள்ளிருக்கும் போது அழைத்தவர்

வெளிவந்ததும்

"வந்ததும் வந்தாய் வெள்ளையாய் வந்திருக்க கூடாதா ? "என்றர்.

மீண்டும் உள் சென்று விட வேண்டும் போலிருந்தது எனக்கு.

 

"கருப்பாய் இருந்தாலும் என் மகள் கலையாய் இருக்கிறாள்"

அம்மா எனக்கு ஆறுதல் சொன்னாளா

தனக்கு சொல்லிக்கொண்டாளா

இன்று வரை விளங்க வில்லை எனக்கு.

 

இதையும் அதையும் தேய்த்தால் நிறம் வரும்

வந்தவர் போனவர் எல்லாம் சொல்ல

குறையுள்ள குழந்தையை பெற்றது போல் குமுறினாள் அம்மா.

பிழையுடன் பிறந்ததாய்  நம்பினேன்.

கருப்பை கரைக்கும் சக்தி  மட்டும்  கண்ணீருக்கு  இருந்திருந்தால்

என் கன்னங்கள் இரண்டும்  செங்கிண்ணங்கள்   ஆகி இருக்கும்

நான் சிந்திய கண்ணீருக்கு.

 

நிழல் கருப்பாய் இருப்பது நிஜம்

நிஜம் கருப்பாய் இருந்தால் நிழல் கூட துணை நிற்பதில்லை

என்று கால போக்கில் கற்றுக்கொண்டேன்

 

பள்ளி விழா நாடகமொன்றில் 

இயலென்பது எனக்கு  இயல்பாய்  வருமாதலால்

அரசியாக்கினர் ஆசிரியர்.

ஒத்திகை போது என் உச்சரிப்பு சரியாயிருந்தும்

பார்த்தவரை நச்சரித்தது  எது என்று விளங்கவில்லை.

காரணமறியாது பணிநீக்கம் செய்யப்பட்டு

பணிப்பெண்ணாய் ஆக்கப்பட்டேன்.

புது அரசியின் சிம்மாசனத்தின் பின்  நிறுத்தப்பட்டு

சின்னதாய் உணரப்பெற்றேன்.

 

நடுக்கமில்லாத கால்கள் எனக்கு

நடனமாட ஆசை கொண்டேன்

செந்நிறம் கொண்டவர் முன் நிற்க  வேண்டுமாம்

எந்நிறம் கொண்டவர்  பின் நிற்க வேண்டுமாம்

கூறிய ஆசிரியரின் வார்தைகள் கூரிய

அம்பாய்  பாய்ந்தது பதின் பருவத்தில்

 

பெண் கேட்டு வந்தவர் எனை  பார்த்ததும்

பொன் கொஞ்சம் கூட கேட்டனர்

நல்ல மாண்பும் மனமும் இருக்க

துணையாய் பண்பும் படிப்பும் இருக்க

பொன்னெதற்கு புரியவில்லை எனக்கு

பொன்னிறம் இல்லாத குறையை பொன் போட்டு நிறை செய்யவாம்

விளக்கம் கிடைக்க பெற்றேன்.

 

சிறிய சிந்தனைகள்  சிந்தை சிதைக்கும் காலம் போய்

சிரிப்பை தூண்டும் பக்குவத்தை

பகுத்தறிவு கற்று கொடுத்ததால் சிந்தித்து பாக்கிறேன்

"சின்ன கண்கள்  கொண்டு பெரிய உலகம் காண்போருக்கு

பெரிய மனது கொண்டு  சின்னவைகளை  சிந்திக்க தோன்றுவது

என்ன ஒரு மானுடவியல் முரண்  என்று? "

 

நல்ல வேலை கண்ணகி இன்றில்லை

கருப்பாய் இருந்தாலும் அவள் கற்புக்கரசி என்றிருப்பார்கள்

"கற்பிற்கும் கலருண்டோ ?" என்று கலங்கி இருப்பாள் சிலம்பு நாயகி

 

மிருகதோலுரித்து ஆடை அணிந்த போது கூட மனிதன்

மனித தோலை பாகு படுத்த வில்லை.

வரலாற்று பக்க்கங்களை புரட்டி பார்க்கிறேன்

அழகையும் நிறத்தையும்  ஒரு கோட்டில் நிறுத்தம்

உதாரணம் ஒன்று கூட இல்லை.

பின் எங்கு நிகழ்ந்தது பிறழ் ?

பெண் வழி சமூகம் நாகரீங்களுக்கு நடுவில் மாறி போனதாலோ ?

பெண்ணில் வெண்ணிறம் வேண்டும் கண்கள்

ஆண் எண்ணிறமானாலும் ஏற்றுக்கொள்கிறதே !

 

கண்ணா!  கார் முகில் வண்ணா

உனை போற்றும் உலகம்

உன் நிறம்  கொண்ட பெண்டிரை

பண்புடன் ஏற்பதில்லை

திரௌபதி துயர் துடைத்தவனே

துகில் உடலிலிருந்து மட்டுமல்ல

உள்ளத்திலிருந்து உரித்தாலும் துன்பம் என்று அறிவாயா நீ

வருவாயா விரைந்து என் கேள்விக்கு விடை சொல்ல?

 

தாயாக நினைக்கிறேன்  நான்

ஏனோ கரு இல்லாமலே கனக்கிறது என் மார்பு

கருப்பு கண்ணிகை பிறந்தால் மீண்டும் ஒரு இருட்டு பயணமா ?

என்ன ஒரு பிற்போக்கான கேள்வி, கேட்டுக்கொள்கிறேன் என்னையே நான்

எந்நிறம் என்றால் என்ன நெஞ்சுரம் கொண்டவருக்கு

பொருட்டில்லாத பேச்சிற்க்கெதிராய்  போராட்டம் எதற்கு 

என் பாதையில் உன் பாதம் படாமல் பார்த்து கொள்வது

எனை போன்றோரின்   பொறுப்பு 

நீயாய் வந்தவள் நீயாக இரு ! நிமிர்ந்து இரு !

 

மற்றோருக்கு மொழி , எமக்கது வழி


பல் மொழி வித்தகனாம் ஒருவன் , தாய் மொழி தவிர 

பிழையா ? என்றான் ஒருவன்.


யாராரோ உற்றவராம் 

ஆராரோ சொன்ன பெற்றவள்  மட்டும் இல்லையாம் , குறையா ? 

கேட்டேன் நான்


„யாதும் ஊரே யாவரும் கேளிர்“ பாடியவர் தம் தமிழ் புலவர் என்றானவன்   


பாரெல்லாம்  ஊர்  ; ஊரெல்லாம்  உறவு , தமிழ் பெருமகனார் சொன்னது பொய்யில்லை . ஆனால் தாய்மொழி  ஊரல்ல...உறவல்ல ..உயிரல்லவோ ?

ஊரது இலையாய் இருக்க உறவதன்   கிளையாய் இருக்க , தாய்மொழி வேர் போன்றது என்றேன் நான்  


வேருக்கு நீரூற்றுவோம்!!! 

அனைவருக்கும் எமது உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள்!

Monday, May 16, 2022

பெண்ணியம்

 

விளக்கென்பர், உன்னை  குல விளக்கென்பர்

விளக்காய் இருந்தாலும் விதி விலக்காய் இருக்க தயங்காதே !!

 

வேரென்பர் உன்னை  ஆணி  வேரென்பர்  

வேராய் இருந்தாலும்  வேறேதும் வாழ்க்கையில்லை என்றெண்ணாதே !!

 

மலரென்பர் உன்னை அழகிய மலரென்பர்

மலராய் இருந்தாலும் தளராதிருக்க தவறாதே!!

 

மெல்லினம் என்பர் மெய்களில் மெல்லினம் என்பர்

உண்மையில் உயிரினங்களில் உயிரினம் நீ என்பதை மறவாதே!!

 

பெண்ணடிமை பழைய கதை

என்னடி இது பிதற்றல் என கேட்க தூண்டும் வரிகள்....அல்லவா??

 

உண்மையில் பிதற்றலாய் இருந்தால்

ஊனமுற்றது  என்  சிந்தையென  ஆகட்டும்  

 

எத்தனை  சாதனை சட்டை பையில் இருந்தாலும்

அத்தனையும் மறந்து

அளவுகளாகவும் வளைவுகளாகவும் மாத்திரம் pennai

சித்தரிக்கும் பித்தர்கள் இருக்கும் வரை

சம உரிமை என்பது

அரசியல் வாதிகளின் தேர்தல் வாக்குறுதி போல்... ஏட்டிலே மட்டுமே நிலை கொள்ளும் உண்மை

ஒரு கருப்பையில் இருந்து வந்தவன்

தன்னுறுப்பால் சின்னஞ்சிறு  கருப்பைகளை    சிதைக்கும் சித்ரவதை நிகழும் வரை எவ்வளவு பெண்ணியம்  பேசியும் 

எள்ளளவும்  புண்ணியம் உண்டோ

 

அவ்வளவு ஏன், மகளிர் விழாக்களை பெரும்பான்மையாக  மகளிர் மட்டுமே சிறப்பிக்கும் வரை

கலைந்தன   பாலின  பேதங்கள்  என்பது

வெறும்  பாலை வன  கானல்கள்

 விண்ணை முட்டும் வெற்றிகள் அடைந்தாலும்

அடுப்படி  பெண்ணுக்கே

என்று இன்றும் எண்ணுவோருக்கு

உன்   இடுப்பெலும்பின் உறுதி தெரிய

பிறவி ஒன்று போதாது

 

உதிரம் உதிர்த்து உயிர் வளர்த்து

உலகம் உழல செய்யும் சக்தி நீ

ஆகவே பெண்ணே!!

 

கற்பும் கண்ணியமும் ஒழுக்கமும் ஓம்பலும்

பெண்ணுக்கு மட்டும் என்று பிற்போக்கு பேசும் கூட்டத்திற்கு

புற முதுகு காட்டுவது  புறநாநூறு கூறாத  புது வீரம் என்றுணர்!!

 

பாலினம் இரண்டென்பது இறைவனின் விதி

இரண்டாம் பாலினம் என்பது இடையில் நடந்த சதி

 

இச்சதி அறிந்தே பாட்டன் பாரதி அன்றே பாடினான்

 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;

முண்டாசு கவிஞனின்  கனவு பாதி பலிக்க  அரை நூற்றாண்டு ஆகி விட்டது

முப்பாதியில் முற்பாதையை கற்பாதையாய் மாற்றிய பெண்களையும் துணை நின்ற ஆண்களையும் மனதில் நிறுத்தி

பிற்பாதி பயணத்தை உறுதியாய் ஒற்றுமையாய் தொடர்வோம்  !!

... முரட்டு அலைகள் சூழ்ந்த பயணமாயினும் கலங்கரை விளக்கம் தென் பட்டு விட்ட தெம்பில் …  நம்பிக்கை  துடுப்பெடுத்தால்   …. சம உரிமை போராட்டம் கரை காண்பது திண்ணம்

Monday, December 13, 2021

திறவுகோல்

 

ஈராறு உயிரில்லாது மூவாறு மெய்க்கு பொருளேது

அறிவோம் நாம் !!

 

பாரார் பாடும் பாரதியும் ஊரார் போற்றும்  நம்  நடுவரும்

நாமாறு பேரும் இல்லாது

இம்ம் மெய் நிகர் மேடைக்கு பொருளில்லை என்பேன் நான்

 

தமிழ் பால் நீங்கா  காதல் கொண்ட கவிஞர்களுக்கும்

தமிழே காதல் கொண்ட நம் நடுவர் திரு அப்துல் காதர் அய்யா 

அவர்களுக்கும் வந்தனங்கள்!

என் தாலும் கோலும் களவி கொள்ள perum காரணமானவன்

கண்ணம்மாவின் கண்ணாளனை

எண்ணாது முடியாது இம்முன்னுரை 

 

தமிழறிவை வரவாக்கி மணித்துளியை செலவாக்கி

கற்பனை கற்களால் கட்டிய என் கவிக்கோவிலுக்கு  இன்று திறப்பு விழா

 

இதோ திறவு கோலை

தலைமையிடம்  தருகிறேன்

வீடுகளும் நாடுகளும் தாழிட்டு இருக்க

திறவுகொலென்னும் தலைப்பில் கவிதை

திறக்க மறுத்து சிரிக்கிறது என்னுடன் சேர்ந்து என் எழுது கோல்

அத்தாழ்களை இல்லையென்றாலும் 

இத்திறவுகோல் தம் இதய தாழ்களை திறந்து

ரத்த நாளங்களுக்கு புத்துயிர் தரும்

என்ற நம்பிக்கையுடன் இதோ நான் !!

 

முத்துக்களாய் நீரது மண்ணில் சிந்த மூடிய முகில்களை திறப்பது  யார்

கொத்து மல்லிகை மனம்   வீச குவிந்த மொட்டுக்களை திறப்பது யார்

புத்தம் புது புல்லொன்று புவி காண  புதைந்த விதையை திறப்பது  யார்

செத்து பிழைத்து ஈன்ற சேயது அழ  தாயாவளின் முலைகளை  திறப்பது  யார்

நித்தம்  சென்றுவரும் சுவாசம் மொத்தமாய் செல்லும் நொடி உயிர்க்கூட்டை திறப்பது யார்

முந்திச்சென்ற விந்து வாசல் வந்து நிற்க கருப்பை கதவை திறப்பது யார்

கெட்டியான இருட்டும் சட்டென்று அகல அக கண்களை திறப்பது யார்

மனமது மகிழும் பொழுதும் நெகிழும் பொழுதும் கண்ணீர் குடங்களை திறப்பது யார்

கடும் பாறையதன் தேகத்தை சிறுவேறொன்று துளைக்கிறது

சுடும் சூரியனின் கதிரது பெரும் சமுத்திரத்தை கிழிக்கிறது

கண்ணில் தெரியாத வைரஸ் தேகம் துளைப்பதால்

இன்று விண்ணில் பறந்த  விமானங்கள்  நின்று போனது

 

Omicron உட்பட திறவுகோலன்றி திறம்பட  திறக்கும் தாழ்கள் 

விஞானத்திற்கும் விளங்காத விந்தைகள்.

எனில் திறவுகோளென்ன  திறனற்றதா  ?

ஐயோ

இதென்ன என் தலைப்பிற்கு வந்த சோதனை

கலையால் கவியரங்கம் கலை இழப்பதோ

மூளை மடிப்புகளை முழுதாய் திறந்து

சற்று சிந்தித்து பார்த்து

சத்தியம் விளங்க பெற்றேன்

 

படைத்தவன் புலப்படாதல் படைப்புகள் பொய்யாவதில்லை

இறைவன் அகப்படாததால்  அவன் இருப்பு இல்லாமலில்லை

முன்நிகழ்வின்  முடிவது இந்நிகழ்வின் திறவுகோல் 

என்ற உண்மை தெளிய பெற்றேன் 

நேற்றென்பது இன்றைய திறவுகோல்

இன்றென்பது நாளைய திறவுகோல்

 

பல் இலக்கியங்களுக்கு நல் இலக்கணம் திறவு கோல்

ஏகாந்தத்தின் அமைதி தத்துவங்களின் திறவு கோல்

நிறைவற்ற மனம் பேராசையின் திறவுகோல்

விடியும்  முன் காணும் கனவுகள் பல விடியல்களின் திறவுகோல்

கொடும் பகைக்கு கடும் அறியாமை திறவுகோல்

இருப்பவனின்  அகந்தைக்கு இல்லாதவனின் இயலாமை திறவுகோல்

நீ புனையும் பொருளுரை மூப்பில் உன்  முடிவுரைக்கு திறவுகோல்

ஆண்மையது பெண்மையின் திறவுகோல்

ஆன்மாவது உண்மையின் திறவுகோல்

பூட்டியிருப்பவைக்கு விடுதலை திறவுகோல்

விடுப்பட்டவைக்கு பூட்டல்லவோ திறவுகோல்

 

இயற்க்கை இதனை இயல்பாய் இயக்க

செயற்கை சிறைகள் ஏன் ??

உடைக்க பட வேண்டிய கதவுகளும்

உதைக்க பட வேண்டிய கதவுகளும்

உருமாறி உலவிக்கொண்டிருக்க


சாம்பல் நிறத்தொரு குட்டி,

கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி,

பாம்பின் நிறமொரு குட்டி,

வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்

அவை யாவும் ஓரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும்

இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்

அதில் மானுடர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

 

எட்டயபுரத்தானின் எண்ணங்களை

கட்டிபிடிக்கவில்லை என்றாலும் எட்டி பிடிக்க முயல்வோம்  !!

 

பஞ்சமில்லாத நெஞ்சுரம் கொண்டவனை

அச்சம்தனை துச்சமாய் எண்ணியவனை எண்ணத்தில் பூட்டுவோம்

சாதிசிறையில் அடைந்திருக்கும் சிந்தையை

பகுத்தறிவு பட்டறையில் சாவி வாங்கி மீட்டெடுப்போம்

 

மதசங்கிலியால் பூட்டிக்கிடக்கும் மனக்கதவுகளை மனிதமென்னும் திறவுகோல் திறக்கட்டும்

சமய  சணலால் கட்டுண்டு கிடக்கும் சித்தத்தை சமத்துவமென்னும்

திறவுகோல் திறக்கட்டும்

 

வாய்ப்பு நல்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி!


 

Wednesday, November 24, 2021

காதலனின் மனைவிக்கு....காதலியின் கடிதம்

 

உன் அடுக்களை பானையில்

என் உலை கொதிக்காதோ

 

 உன் மாடி தோட்டத்தில்

என் மல்லிகை மலராதோ

 

 உன் வீட்டு வாசத்தில்

என்  சுவாசம் சேராதோ

 

 உன் தலையணை மடிப்பில்

எந்தன் மயிரிழை இழையாதோ

 

 உன் விடியாத இரவுகள்

என் நாணம் காணோதோ

 

 உன் தாய்மையின் பாரம்

என் மடி உணராதோ

 

 உன் மங்கள திலகம்

என் நெற்றி சேராதோ

 

 என்னவன் என்றெண்ணியவனை

தன்னவனாய் கொண்டவளே

பெண்ணிவளின் நோவதனை

நீயறிய நியாயமில்லை..

 

 பிரிந்து போன பின்னாலும்

பின்னி கிடக்கும் நினைவுகள்

கலைந்து விட்ட பின்னாலும்

கண்ணில் நிற்கும் கனவுகள்

விலகி விட்ட பின்னாலும்

அகல மறுக்கும் ஏக்கங்கள்

 

விழி நான்கும் கண்ட ஒற்றை கனா

தடம்  மாறி போன பின்

விரல் கோர்த்து பேசிய காதல் மொழி

கானலென ஆன பின்

கற்பனை செய்து காயம் ஆற்றி கொள்கிறேன் .

என் காதலனை உன் கணவனாக்கிய

 

காலத்தை நொந்து கொள்கிறேன்

தொடங்கிய கவிதை முடிவதற்குள்

தொலைந்து போனது என் பேனா

முடியாத என் கவிதையை

விடியாத இரவுகளுக்கு பரிசாக்கி விட்டேன்

 

கால சுழற்சியில் வாழ்க்கை பழகி கொண்டேன்

இரவுக்கும் பகலுக்கும் இடையில் என் காதல் மறைக்க கற்றேன்

 

 என் முன்னால் காதலனை

இந்நாள் கணவனாய் கொண்டவளே,

 

நானறிந்த உன்னவனை

நீயறிய வழியில்லை

 

நீயறிந்த என்னவனை

நானறியாமல்  பார்த்துக்கொள்

திருமண பரிசாய்

திரும்ப தருகிறேன்

என் காதலை.

தாரைவார்த்தவனுடன்  தாராளமாய் வாழ்ந்து விட்டு போ !