My Journey with Words and Life
Wednesday, January 7, 2026
வெள்ள சேல
தச்சு கிழிஞ்ச சேலையா ? கிழிஞ்சு தச்ச சேலையா ?
சொல்லுற சக்தி சேலைக்கும் இல்ல
சொல்லி ஆக போறது அவளுக்கும் ஒன்னில்ல
வெடிச்ச வாயி ;தடிச்ச வறுமை
ஒட்டிப்போன வயிறு:
கட்டிப்போன கண்ணீரு
ஆல மர வேரா ? கூரா போனா காலா
?
கொழம்பி நிக்குது பூமி
ஓழவு காட்டுல ஓடுன கம்மாய்க்கும்
தல பாரத்தையும் தளராத அவ பாரத்தையும்
சேத்து சொமந்த சும்மாடுக்கும்
அடிக்கிற காத்துக்கும்
அவளுக்கு மட்டும் குடுக்காத சாமிக்கும் தான் தெரியும் அவ கத
வாக்கப்பட்டு வந்து வருசம் ஒன்னு ஓடி போக
உள்ளுசுரு உருவாக ஊற வெச்ச பயற
மென்னு தின்ன திண்ணைல ஒக்கார
இடியா
எறங்குது புருசன் எறந்த சேதி
ரெண்டாவது உலக போராம்
சண்டகாரன் போட்ட குண்டு
அவ அண்டத்த மாத்தி போட்டுச்சு
“புடிச்சாலும் இல்லனாலும் மண்ணோட முடியுற பொழப்பிது
நடுவுல ஏன் அந்த மண்ணுக்கு சண்டை போட்டு
மத்தவன் பொழப்புல மண்ணை போடணும் .
எவனுக்கோ செவப்பு சாயம் புடிக்க என் சேலை வெள்ளையாச்சே
செயிக்க போறவனே கேட்டுக்க , அப்பன் இல்லாத என் புள்ளைக்கு
என்னைக்குமே நீ தோத்தவன் தான் “
பொலம்பிகிட்டே புள்ள பெத்தா
,
சித தீ ஆசியோட,
சுடுகாட்டுல புது உசுரு
புள்ள
பொறந்த வலி பெருசா ,
? புருசன் போன வலி பெருசா ? புடி படல அவளுக்கு
பொறப்பெடுத்த உசுர உருப்படியாக்க
கெடச்ச
வேலைக்கெல்லாம் போனா
மனச கல்லாக்குனா
; கல்ல மண்ணாக்குனா
கலையுற எண்ணத்த களையெடுத்து கடந்து போனா
கூலியா வந்த கலிய பெத்தது பிச்சு தின்ன
களப்ப
மறந்து களிச்சு போனா
மத்ததுக்கு மூணு வேல
தான் பெத்ததுக்கு ரெண்டு
; ஒண்ணே ஒன்னு தனக்கு
எழவு
விழுந்த நா மொதலா அவ போட்ட புது கணக்கு
மத்தியானம் பொழப்பு காட்டுல முடிய
ராவுக்கு ,கவலையெரிச்சு கண்ணீருல ஓல வெச்சா
கல்லரசியே வெந்து போகும் நெல்லரிசிக்கென்ன
பொங்கி
வெச்ச பழைய சோத்துல
நேத்து வெச்ச மோர ஊத்தி
வைராக்கியத்த தொட்டு ஊட்டி வயத்தை ரொப்பி
மகன தூங்க வெப்பா
காலியான சட்டியில ஒட்டியிருக்க பருக்கையோட
பசிய சேத்து
கரைச்சு குடிச்சு துக்கத்தோடு தூங்க போனா
வருஷம்
பல ஓடி போச்சு
புயலொன்னு வந்து போனா
வம்மையான மரங்கூட ஒடஞ்சு போகுமாம்
மெம்மையான புல்லு அருகாம நிக்குமாம்
புல்லா இருந்து வளத்த புள்ள தலையெடுத்துருச்சு
அவ கதைய நினைக்க
காஞ்சிபோன கம்மாய்க்கும் கண்ணு கசியுது
ஓஞ்சு போன சும்மாடுக்கும் சொம கூடுது
காடு கூப்பிட காத்திருக்கு
ஆத்து மேட்டுல உக்காந்து இருந்த ஆத்தாவ மகன் கேட்டான்
கடைசி ஆச இருக்கா ஒனக்கு ?
கொறையா
போன பொழப்புல
நெறைச்சு போற வரைக்கும்
நெறய தேடுன நல்ல மனசு காரி சொல்லுறா
உங்கப்பன் செத்ததால இத்து போச்சு என் பொழப்பு
என்ன போல இன்னும் எத்தன;
இது இன்னும் முடிஞ்சு விடிஞ்ச பாடில்ல
என் கோடி சேலைய கொடையா தாரேன்
;கொடியா தாரேன்
குண்டு போட்டவனுக்கு குடுத்தனுப்பு
ரெண்டு மூணாக வேணாம்
! என் கதி இன்னொருத்திக்கு வேணாம்
Sunday, October 19, 2025
புதுவை ஈன்ற புதுமை
அலை கடல் கதை சொல்லும் ஊரில்
கவிதை சொல்ல பிறந்ததொரு பேரலை
கடலலை சீற்றம் கொண்டால்
அழிவொன்றே எஞ்சி இருக்கும்
தமிழலை சீற்றம் கொண்டால்
ஆக்கமொன்றே விஞ்சி நிற்கும்
ஆக்கத்தின் தாக்கம் ! ஆம் !
பழைய புதுவை புதிதானது
திராவிட திரவம் சிந்த சிந்த
சுயமரியாதை தீபம் சுடர் விட்டது
சுப்பிரமணியன் வைத்த புரட்சி புள்ளிகள்
சுப்புரத்தினத்தின் கோலத்திற்கு வடிவம் தந்தன
முண்டாசுக்கும் முறுக்கு மீசைக்கும்
தாசனானவன் தசாப்தங்கள் கடந்து
பேசும் காவியங்கள் படைக்க
சமுதாய (அ)நியாயங்கள் சாய்ந்தன .
அவன் சிந்தனை ஊற்றெடுக்க எடுக்க
அச்சேரியவை கவிதைகள் அல்ல
அரங்கேறியது சுயமரியாதை கச்சேரி
வாள் கொண்டல்ல (எழுது) கோல் கொண்டு
முற்காட்டில் முற்போக்கு மரம் நாட்டவன்
சாதி சதிராடிய காலத்தில்
அதன் சலங்கையைப்பிய்த்தெறிந்தவன்
மண்ணில் ஏற்ற தாழ்வு இயற்கை
மானுடத்தில் அது செயற்கை
என்று அறைந்து சொன்னவன் .
அச்சு கொண்டு அநீதி செய்த
நச்சு நாகங்களை நசுக்கி கொன்றவன்
பழைய சித்தாந்தங்களில் பூட்டி கிடந்த சிந்தையை
பகுத்தறிவு பட்டறையில் சாவி வாங்கி மீட்டெடுத்தவன்
சின்ன மீசை வைத்த பெரு சிந்தனையாளன்
என்னிந்தனை ஆயினும் எண்ணில் கொள்ளாதவன்
பஞ்சமில்லாத நெஞ்சுரம் கொண்டவன்
அச்சமதனை துச்சமாய் எண்ணியவன்
சமயம் பார்க்கும் நீதியை சாடியவன்
சமநீதி சொல்ல சமயம் தேடாதவன்
அமுதென்று அழைத்தான் தமிழை
சங்கெடுத்து முழங்க செய்தான் அதன் புகழை
பாவேந்தன் பாடிய பண்ணும்
அப்பண் ஏந்திய பொருளும்
தமிழ் வாழும் வரை வாழும்
தமிழுக்கு அழிவில்லையாம் ! அவனுக்கும் தான்
அலைகள் ஓய்வதில்லை ! பேரலை பற்றி சொல்ல வேண்டுமா ?
- கலை அரசி முருகேசன்
Wednesday, September 24, 2025
தமிழும் நானும் - தமிழ் என் காதலன்
ஆறு மாதம் எனக்கு, எவ்வளவு துணிவு உனக்கு
அத்துமீறிய ஒரு தீண்டல் , என்
நாவில்
"அம்மா " என்று துவங்கிய உறவு ...
அம்மம்மா ! இன்றும்
குறையவில்லை நறவு
இடையில் இடையூறுகள் இல்லாமல் இல்லை
தடை இல்லாது காதல் இங்கேது
விலகிச்சென்றேன் மூன்று வயதில்
ஆங்கிலம் எனும் ஆடவனுக்கு இடம் கொடுத்தேன்
இருப்பினும் என் இடக்கையயை
விட வில்லை நீ
மன்னித்தாய் அந்நாளில்
அது உன் மாண்பென்பது உணர்ந்தேன் பின்னாளில்
கன்னி பருவம் வந்த போது புது காதலன் பிடித்து போக
ஒட்டி கொண்டிருந்த உன்னை வெட்டி விட்டு சென்றேன்
பழைய பஞ்சாங்கம் என்ற பட்டம் வருமென்று
கண்ணியமான காதலன் நீ!
உண்மை உணர நேரம் கொடுத்தாய்
வாய்மையறியும் வயதிலுணர்ந்தேன்
அயர்ச்சி இல்லாத முதிர்ச்சி நீ
பழமை இல்லாத தொன்மை நீ
இறந்தகாலம் இல்லாத நிகழ்காலம் நீ
இறப்பில்லாத இளமை நீ
பயிரூர வேருக்கு நீர்
போல்
என் உயிரூர நீ வேண்டுமெனக்கு
என் தலைப்பெழுத்து நீ ; பிழை
இல்லாத தலையெழுத்து நீ
என் முடியாத பயணம் நீ ;துவங்காத முடிவும் நீ
என் சத்தியத்தின் துலக்கம் நீ ;தத்துவத்தின் விளக்கம்
நீ
என் கனவில் கவிதை நீ
; கவிதையில் கனவு நீ
எடுப்போர்க்கு நீர் நீ ;கொடுப்போர்க்கு சீர் நீ
என் காதலனே ! என் தமிழே !
உன்னை என்னவனாய் எண்ண காரணிகள்
தான் என்ன
உன் வள்ளுவத்தின் வல்லமை
விஞ்சிய வீரியம் உண்டா
உன் அகமும் புறமும்
பேசாத அறமுண்டா
பரணி கூறும் உன் வீரம் வெல்ல தரணியில்
ஆளுண்டா
நீ இல்லாது கம்பரும்
கூத்தரும்
பாரதியும் அவனுக்கு
தாசனும் இங்கேது
சங்கங்களால் வளர்க்கப்பட்ட
என் சிங்கம் நீ
ஆண்டாண்டாய் ஆண்டவர்க்கெல்லாம் அடிபணியாத
ஆளுமை நீ
உனை எண்ணி கர்வம் கொள்கிறது என் காதல்
காதலா !
கணவனாய் கொள்ள மாட்டேன்
உனை
வைய்யகத்திற்க்கானவனை நான் மட்டும் வைத்து கொண்டால்
வைய்யாதா ஊர் எனை ?
இருந்துவிட்டு போகிறேன் உன் காதலியாகவே இறுதி வரை
பல காதலிகள் உனக்கு! கவலை இல்லை எனக்கு !
ஆனால் அறுதியான ஒரு உறுதி கொடு
நாவறண்டு நானுதிரும் முன்
என் வாய் உதிர்ப்பது உனையாய் இருக்க வேண்டும்
Thursday, May 22, 2025
கலியுகத்துப்பரணி
திசை
அறியா பறவையொன்று
போர்
விமான விசையில் அலறியதில்
சிதறிய எச்சத்தின்
மிச்சமாய் மண் சேர்ந்ததொரு வித்து .
விடியல்
காண்பதில்லை புதையாத விதை
போர்க்களத்தில்
விடியல் எங்கே விசும்பியது அது
குண்டடி பட்ட ஒரு(மற)வன் ஓலத்துடன்
மேல்
விழ
மண்ணில்
புதைந்தது விதை .
போருக்காக
போர் செய்தவனோ
சோறுக்காக
போர் செய்தவனோ
அறியோம்
நாம் ; அவனுதிரம் உதிர
உயிரானது விதை , உடலானது சதை
„என்னானானோ“
பதறியது சுற்றம்
எண்ணாயிருந்தான்
அவன் அப்போது
இன்னும்
எத்தனை எண்களோ ?
தகப்பனின்
கல்லறை மேல் அரியணை
தனியான
தனயனின் குறை தீர்க்க
முரணுக்கு
அறம் இல்லை. ..அரணும் இல்லையா ?
மண்ணுரிமைக்கு மனித உயிரா ?
கொல்லப்படுவது மனிதம்
எனில்
வெல்வதெப்படி வீரமாகும்
?
எளியோனை
சிதைக்கும் வலியோனே
போர்
வலியென்று அறிவாயா நீ
கொன்று
வென்று பிணம் குவித்த சுடுகாட்டில்
ஆவிகளுக்கு
அரசனாக எண்ணமா ?
கணக்கிலடங்கா
சிதைகள்; கூட கறபனைக்கெட்டாத சித்ரவதைகள்
களத்தில்
இல்லாது வேறு கண்டத்தில் பட்டிமன்றம்
நடந்தவை
குற்றமா இல்லையா என்று.
வெள்ளையான
மாளிகையென்பதால் அழுக்கிருக்காதா என்ன ?
விழித்தெழு
; மனிதம் வீழாமல் பார்த்து கொள்.
ஜெயம்கொண்டாரே
பயம் கொள்ளும் கொடுமைகள்
இனி
நடவாமல் இருக்கட்டும்.
போர்
துறப்பது அறம் மட்டுமல்ல; மறமென்றுணர்
தரணியது புது பரணி பாடும்
உனக்கு
„எய்தவன்
அறியா அம்பானோம் நீயும் நானும்“
மலரான
வித்து ஆறுதலாய் சேதிசொன்னது செத்தவனுக்கு .
இறப்பிற்கு
அழுவதா, பிறப்பிற்கு மகிழ்வதா
தான்
வந்த திசை தவறானதென்று , வித்திட்ட பறவை விம்மியது.
Wednesday, February 26, 2025
சிறகின் பாரம் இறகுக்கு
சல்லி சல்லியாய் உடைந்து கொண்டிருக்கிறேன்
என்னை என்னிடமே இழந்து கொண்டிருக்கிறேன்
மறக்க நினைக்கிறேன்! மறைந்து கொள்கிறேன் !
திரும்ப கிடைக்காத இடத்தில கொடுத்தது வைத்தது யார் தவறு
திரும்ப தருகிறேன் என்று யாரும் சொல்ல வில்லை
இருந்தாலும் கொடுத்தேன் சற்றே அளவுக்கு அதிகமாய்
கொடுத்து விட்டதை எண்ணி கலங்குகிறேனா ...
ஏதும் கொடுக்கப்படவில்லை என வருந்துகிறேனா
எதிர்பார்ப்புகள் இல்லாத உறவும் இயலுமா
எல்லாமிருக்கிறது என்னிடம் என்னை தவிர
பேச முயல்கிறேன் ,சொல் எழவில்லை
அழ தவிக்கிறேன், கண்ணீர் துளிர்க்கவில்லை
ஒன்றாய் சேர்த்து கொட்டி அழுது விட்டால் முடிந்து விடுமா ?
முடிய வேண்டுமா ?
துயரை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறேன் !
துயர் இறந்தால் நானும் இறந்து விடுவேனோ ? அறியேன் நான்
முகவரி இல்லாத கடிதம்
பதின்பருவத்தில்
சிதறிய சின்ன பொறி
விளையாட்டாய்
தொடங்கிய விதி
விதியாய்
தொடரும் விளையாட்டு
வேண்டுமென்று
துவங்கவில்லை
எனினும் வேண்டாமென்று
தோன்றவில்லை
ஒரு
நாடகத்தில் இரு வேடம் எனக்கு
,
வேடங்கள்
விளக்கி விட்டால்
வேடம் கலைந்து விடும்
கலையாதிருப்பது
கதைக்கு நல்லது
தவறும்
சரியும் அறியாமல் இல்லை
தவறென்று
தெரிந்தும், சரி செய்ய எண்ணவில்லை
தவறை
சரியாய் செய்யவே தவித்தது மனம்
வயதோ
என்றெண்ணினேன்
„சரியும்
தவறும், அறியா வயதில்
அததன்
இடத்தில அமர்வதில்லை „
16 வயது
சொல்லும் பல தத்துவங்களில் இதுவும்
ஒன்று
இடையில்
இடைவெளிகளுடன்
வருடங்கள்
பல கழிந்தாலும்
ஈர்ப்பின்
ஈரம் வற்றியதாய் தோன்றவில்லை
முதிர்ச்சி
தவறை தவிர்க்குமோ
சிந்தித்து
பார்த்தேன் ; சிந்தை
சொன்னது
தவறென்று
நினைத்ததே தவறோ
பெயரில்லாத
உறவில் தவறென்ன ;பொருள்
இருக்க
திசை
இல்லாத பயணத்தில் தவறென்ன
; பாதை இருக்க
நீயில்லாத
உறவில் தவறென்ன ; நானிருக்க
நானாய்
நானிருக்கும் வரை
நீயாராய்
இருந்தாலும் கவலையில்லை எனக்கு
என் கண்ணீர்,
நீ
கவிதை நீ
என் புன்னகை
நீ , புளிங்காகிதம் நீ
என்னிலிருக்கும்
உன்னை நீ அறிய போவதில்லை
அது
எனக்கு அவசியமும் இல்லை
சில
நேரங்களில் நிஜமாகவும்
பல நேரங்களில்
நினைவாகவும்
உறவு
பழகும் கலை
காலப்போக்கில்
கற்றுக்கொண்டேன் !