Wednesday, September 24, 2025

தமிழும் நானும் - தமிழ் என் காதலன்

 

ஆறு மாதம் எனக்கு, எவ்வளவு துணிவு உனக்கு

அத்துமீறிய  ஒரு  தீண்டல் , என்  நாவில் 

"அம்மா " என்று துவங்கிய உறவு ...

அம்மம்மா ! இன்றும்  குறையவில்லை  நறவு 

இடையில் இடையூறுகள் இல்லாமல் இல்லை

தடை  இல்லாது காதல் இங்கேது

விலகிச்சென்றேன் மூன்று வயதில்

ஆங்கிலம் எனும் ஆடவனுக்கு இடம் கொடுத்தேன்

இருப்பினும் என்  இடக்கையயை விட வில்லை நீ

மன்னித்தாய் அந்நாளில்

அது உன் மாண்பென்பது உணர்ந்தேன்  பின்னாளில்

 

கன்னி பருவம் வந்த போது புது காதலன் பிடித்து போக

ஒட்டி கொண்டிருந்த உன்னை வெட்டி விட்டு சென்றேன்

பழைய பஞ்சாங்கம் என்ற பட்டம் வருமென்று

கண்ணியமான காதலன் நீ!  உண்மை உணர நேரம் கொடுத்தாய்

 

வாய்மையறியும்  வயதிலுணர்ந்தேன் 

அயர்ச்சி இல்லாத முதிர்ச்சி நீ

பழமை இல்லாத தொன்மை நீ

இறந்தகாலம் இல்லாத நிகழ்காலம் நீ

இறப்பில்லாத  இளமை  நீ 

 

பயிரூர வேருக்கு  நீர் போல்

என் உயிரூர நீ வேண்டுமெனக்கு

என்  தலைப்பெழுத்து  நீ ; பிழை  இல்லாத  தலையெழுத்து  நீ 

என் முடியாத பயணம் நீ ;துவங்காத முடிவும் நீ

என் சத்தியத்தின்  துலக்கம்  நீ ;தத்துவத்தின்  விளக்கம்  நீ

என் கனவில்  கவிதை நீ ; கவிதையில்  கனவு  நீ

எடுப்போர்க்கு  நீர்  நீ  ;கொடுப்போர்க்கு  சீர்  நீ 

 

என் காதலனே ! என் தமிழே !

உன்னை  என்னவனாய்  எண்ண காரணிகள்  தான்  என்ன

உன்  வள்ளுவத்தின் வல்லமை விஞ்சிய வீரியம் உண்டா

உன்  அகமும்  புறமும்  பேசாத  அறமுண்டா

பரணி  கூறும் உன்  வீரம்  வெல்ல  தரணியில்  ஆளுண்டா

நீ  இல்லாது  கம்பரும்   கூத்தரும் 

பாரதியும்  அவனுக்கு தாசனும்  இங்கேது 

சங்கங்களால் வளர்க்கப்பட்ட  என்  சிங்கம் நீ

ஆண்டாண்டாய்  ஆண்டவர்க்கெல்லாம்  அடிபணியாத  ஆளுமை  நீ

உனை எண்ணி  கர்வம்  கொள்கிறது என் காதல்

 

காதலா  !

கணவனாய்  கொள்ள  மாட்டேன்  உனை 

வைய்யகத்திற்க்கானவனை நான் மட்டும் வைத்து கொண்டால்

வைய்யாதா ஊர் எனை ?

இருந்துவிட்டு போகிறேன் உன் காதலியாகவே இறுதி வரை

பல காதலிகள் உனக்கு! கவலை இல்லை  எனக்கு !

ஆனால் அறுதியான ஒரு உறுதி கொடு

நாவறண்டு நானுதிரும் முன்

என் வாய் உதிர்ப்பது உனையாய் இருக்க வேண்டும்