Sunday, October 19, 2025

புதுவை ஈன்ற புதுமை

அலை கடல் கதை சொல்லும் ஊரில் 

கவிதை சொல்ல பிறந்ததொரு பேரலை 


கடலலை சீற்றம் கொண்டால் 

அழிவொன்றே எஞ்சி இருக்கும்

தமிழலை சீற்றம் கொண்டால் 

ஆக்கமொன்றே விஞ்சி நிற்கும் 


ஆக்கத்தின் தாக்கம் ! ஆம் ! 

பழைய புதுவை புதிதானது 

திராவிட திரவம் சிந்த சிந்த 

சுயமரியாதை தீபம் சுடர் விட்டது 

சுப்பிரமணியன் வைத்த புரட்சி புள்ளிகள்

சுப்புரத்தினத்தின் கோலத்திற்கு வடிவம் தந்தன 


முண்டாசுக்கும் முறுக்கு மீசைக்கும் 

தாசனானவன் தசாப்தங்கள் கடந்து 

பேசும் காவியங்கள் படைக்க 

சமுதாய (அ)நியாயங்கள்  சாய்ந்தன .


அவன் சிந்தனை ஊற்றெடுக்க எடுக்க 

அச்சேரியவை கவிதைகள் அல்ல 

அரங்கேறியது சுயமரியாதை கச்சேரி 


வாள் கொண்டல்ல (எழுது) கோல் கொண்டு 

முற்காட்டில் முற்போக்கு மரம் நாட்டவன் 

சாதி சதிராடிய காலத்தில் 

அதன் சலங்கையைப்பிய்த்தெறிந்தவன் 


மண்ணில் ஏற்ற தாழ்வு இயற்கை 

மானுடத்தில் அது செயற்கை 

என்று அறைந்து சொன்னவன் .

அச்சு கொண்டு அநீதி செய்த 

நச்சு நாகங்களை நசுக்கி கொன்றவன் 


பழைய சித்தாந்தங்களில் பூட்டி கிடந்த சிந்தையை

பகுத்தறிவு பட்டறையில் சாவி வாங்கி மீட்டெடுத்தவன் 

சின்ன மீசை வைத்த பெரு சிந்தனையாளன் 

என்னிந்தனை ஆயினும் எண்ணில் கொள்ளாதவன் 


பஞ்சமில்லாத நெஞ்சுரம் கொண்டவன் 

அச்சமதனை துச்சமாய் எண்ணியவன் 

சமயம் பார்க்கும் நீதியை சாடியவன் 

சமநீதி சொல்ல சமயம் தேடாதவன் 


அமுதென்று அழைத்தான் தமிழை 

சங்கெடுத்து முழங்க செய்தான் அதன் புகழை 


பாவேந்தன் பாடிய பண்ணும் 

அப்பண் ஏந்திய பொருளும்

தமிழ் வாழும் வரை வாழும் 

தமிழுக்கு அழிவில்லையாம் ! அவனுக்கும் தான் 

அலைகள் ஓய்வதில்லை ! பேரலை பற்றி சொல்ல வேண்டுமா ?


                                                                                - கலை அரசி முருகேசன் 

Wednesday, September 24, 2025

தமிழும் நானும் - தமிழ் என் காதலன்

 

ஆறு மாதம் எனக்கு, எவ்வளவு துணிவு உனக்கு

அத்துமீறிய  ஒரு  தீண்டல் , என்  நாவில் 

"அம்மா " என்று துவங்கிய உறவு ...

அம்மம்மா ! இன்றும்  குறையவில்லை  நறவு 

இடையில் இடையூறுகள் இல்லாமல் இல்லை

தடை  இல்லாது காதல் இங்கேது

விலகிச்சென்றேன் மூன்று வயதில்

ஆங்கிலம் எனும் ஆடவனுக்கு இடம் கொடுத்தேன்

இருப்பினும் என்  இடக்கையயை விட வில்லை நீ

மன்னித்தாய் அந்நாளில்

அது உன் மாண்பென்பது உணர்ந்தேன்  பின்னாளில்

 

கன்னி பருவம் வந்த போது புது காதலன் பிடித்து போக

ஒட்டி கொண்டிருந்த உன்னை வெட்டி விட்டு சென்றேன்

பழைய பஞ்சாங்கம் என்ற பட்டம் வருமென்று

கண்ணியமான காதலன் நீ!  உண்மை உணர நேரம் கொடுத்தாய்

 

வாய்மையறியும்  வயதிலுணர்ந்தேன் 

அயர்ச்சி இல்லாத முதிர்ச்சி நீ

பழமை இல்லாத தொன்மை நீ

இறந்தகாலம் இல்லாத நிகழ்காலம் நீ

இறப்பில்லாத  இளமை  நீ 

 

பயிரூர வேருக்கு  நீர் போல்

என் உயிரூர நீ வேண்டுமெனக்கு

என்  தலைப்பெழுத்து  நீ ; பிழை  இல்லாத  தலையெழுத்து  நீ 

என் முடியாத பயணம் நீ ;துவங்காத முடிவும் நீ

என் சத்தியத்தின்  துலக்கம்  நீ ;தத்துவத்தின்  விளக்கம்  நீ

என் கனவில்  கவிதை நீ ; கவிதையில்  கனவு  நீ

எடுப்போர்க்கு  நீர்  நீ  ;கொடுப்போர்க்கு  சீர்  நீ 

 

என் காதலனே ! என் தமிழே !

உன்னை  என்னவனாய்  எண்ண காரணிகள்  தான்  என்ன

உன்  வள்ளுவத்தின் வல்லமை விஞ்சிய வீரியம் உண்டா

உன்  அகமும்  புறமும்  பேசாத  அறமுண்டா

பரணி  கூறும் உன்  வீரம்  வெல்ல  தரணியில்  ஆளுண்டா

நீ  இல்லாது  கம்பரும்   கூத்தரும் 

பாரதியும்  அவனுக்கு தாசனும்  இங்கேது 

சங்கங்களால் வளர்க்கப்பட்ட  என்  சிங்கம் நீ

ஆண்டாண்டாய்  ஆண்டவர்க்கெல்லாம்  அடிபணியாத  ஆளுமை  நீ

உனை எண்ணி  கர்வம்  கொள்கிறது என் காதல்

 

காதலா  !

கணவனாய்  கொள்ள  மாட்டேன்  உனை 

வைய்யகத்திற்க்கானவனை நான் மட்டும் வைத்து கொண்டால்

வைய்யாதா ஊர் எனை ?

இருந்துவிட்டு போகிறேன் உன் காதலியாகவே இறுதி வரை

பல காதலிகள் உனக்கு! கவலை இல்லை  எனக்கு !

ஆனால் அறுதியான ஒரு உறுதி கொடு

நாவறண்டு நானுதிரும் முன்

என் வாய் உதிர்ப்பது உனையாய் இருக்க வேண்டும்

Thursday, May 22, 2025

கலியுகத்துப்பரணி

 

திசை அறியா பறவையொன்று

போர் விமான விசையில்  அலறியதில் 

சிதறிய  எச்சத்தின்  மிச்சமாய் மண் சேர்ந்ததொரு  வித்து .

விடியல் காண்பதில்லை புதையாத விதை

போர்க்களத்தில் விடியல் எங்கே விசும்பியது  அது

 

குண்டடி  பட்ட ஒரு(மற)வன் ஓலத்துடன்

மேல் விழ

மண்ணில் புதைந்தது விதை .

போருக்காக போர் செய்தவனோ

சோறுக்காக போர் செய்தவனோ

அறியோம் நாம் ; அவனுதிரம் உதிர

உயிரானது  விதை , உடலானது சதை 

„என்னானானோ“ பதறியது  சுற்றம் 

எண்ணாயிருந்தான் அவன்  அப்போது

இன்னும் எத்தனை எண்களோ ?

 

தகப்பனின் கல்லறை மேல் அரியணை

தனியான தனயனின் குறை தீர்க்க

முரணுக்கு அறம் இல்லை. ..அரணும்  இல்லையா ?

மண்ணுரிமைக்கு  மனித உயிரா ?

கொல்லப்படுவது  மனிதம்  எனில்

வெல்வதெப்படி  வீரமாகும்  ?

எளியோனை சிதைக்கும் வலியோனே

போர் வலியென்று அறிவாயா நீ

கொன்று வென்று பிணம் குவித்த சுடுகாட்டில்

ஆவிகளுக்கு அரசனாக எண்ணமா ?

கணக்கிலடங்கா சிதைகள்; கூட கறபனைக்கெட்டாத சித்ரவதைகள் 

களத்தில் இல்லாது வேறு கண்டத்தில் பட்டிமன்றம்

நடந்தவை குற்றமா இல்லையா என்று.

வெள்ளையான மாளிகையென்பதால் அழுக்கிருக்காதா  என்ன ?

விழித்தெழு ; மனிதம் வீழாமல் பார்த்து கொள்.

ஜெயம்கொண்டாரே பயம் கொள்ளும் கொடுமைகள்

இனி நடவாமல் இருக்கட்டும்.

போர் துறப்பது அறம் மட்டுமல்ல; மறமென்றுணர்

தரணியது  புது  பரணி  பாடும்  உனக்கு

 

„எய்தவன் அறியா அம்பானோம் நீயும் நானும்“

மலரான வித்து ஆறுதலாய் சேதிசொன்னது  செத்தவனுக்கு  .

இறப்பிற்கு அழுவதா, பிறப்பிற்கு மகிழ்வதா

தான் வந்த திசை தவறானதென்று  , வித்திட்ட பறவை விம்மியது.

Wednesday, February 26, 2025

சிறகின் பாரம் இறகுக்கு

 சல்லி சல்லியாய் உடைந்து கொண்டிருக்கிறேன்

என்னை என்னிடமே இழந்து கொண்டிருக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்! மறைந்து கொள்கிறேன் !

திரும்ப கிடைக்காத இடத்தில கொடுத்தது வைத்தது யார் தவறு 

திரும்ப தருகிறேன் என்று யாரும் சொல்ல வில்லை 

இருந்தாலும் கொடுத்தேன் சற்றே அளவுக்கு அதிகமாய் 

கொடுத்து விட்டதை எண்ணி கலங்குகிறேனா ...

ஏதும் கொடுக்கப்படவில்லை என வருந்துகிறேனா

எதிர்பார்ப்புகள் இல்லாத உறவும்  இயலுமா 

எல்லாமிருக்கிறது என்னிடம் என்னை தவிர 

பேச முயல்கிறேன் ,சொல் எழவில்லை

அழ தவிக்கிறேன், கண்ணீர்  துளிர்க்கவில்லை 

ஒன்றாய் சேர்த்து கொட்டி அழுது விட்டால் முடிந்து விடுமா ?

முடிய வேண்டுமா ? 

துயரை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறேன் !

துயர் இறந்தால் நானும் இறந்து விடுவேனோ ? அறியேன் நான் 

முகவரி இல்லாத கடிதம்

 

பதின்பருவத்தில் சிதறிய சின்ன  பொறி

விளையாட்டாய் தொடங்கிய விதி

விதியாய் தொடரும் விளையாட்டு

வேண்டுமென்று துவங்கவில்லை

எனினும்  வேண்டாமென்று தோன்றவில்லை

ஒரு நாடகத்தில் இரு வேடம் எனக்கு ,

வேடங்கள் விளக்கி  விட்டால் வேடம் கலைந்து விடும்

கலையாதிருப்பது கதைக்கு நல்லது

 

தவறும் சரியும் அறியாமல் இல்லை

தவறென்று தெரிந்தும், சரி செய்ய எண்ணவில்லை

தவறை சரியாய் செய்யவே தவித்தது மனம் 

வயதோ என்றெண்ணினேன்

„சரியும் தவறும், அறியா வயதில்

அததன் இடத்தில அமர்வதில்லை

16 வயது சொல்லும் பல தத்துவங்களில் இதுவும் ஒன்று

 

இடையில் இடைவெளிகளுடன்

வருடங்கள் பல கழிந்தாலும்  

ஈர்ப்பின் ஈரம் வற்றியதாய் தோன்றவில்லை

முதிர்ச்சி தவறை தவிர்க்குமோ

சிந்தித்து பார்த்தேன்  ; சிந்தை சொன்னது

தவறென்று நினைத்ததே தவறோ

பெயரில்லாத உறவில் தவறென்ன  ;பொருள் இருக்க

திசை இல்லாத பயணத்தில்   தவறென்ன ; பாதை இருக்க

நீயில்லாத உறவில் தவறென்ன ; நானிருக்க

நானாய் நானிருக்கும் வரை

நீயாராய் இருந்தாலும் கவலையில்லை எனக்கு

 

என் கண்ணீர்,  நீ கவிதை நீ

என் புன்னகை நீ , புளிங்காகிதம் நீ

என்னிலிருக்கும் உன்னை நீ அறிய போவதில்லை

அது எனக்கு அவசியமும் இல்லை

 

சில நேரங்களில் நிஜமாகவும்

பல  நேரங்களில் நினைவாகவும் 

உறவு பழகும் கலை

காலப்போக்கில் கற்றுக்கொண்டேன் !

Sunday, February 25, 2024

கார்மேகம் கண்ணீர் வடிக்கிறது

 


கருவானவள்  உயிரானேன் ; களிப்படைந்தர்.

உயிரானவள் உருப்பெற்றேன் ; உற்சாகமடைந்தர்

உருப்பெற்றவள் உலகம் காண வந்தேன் .

 

"மகளே வா! மஹால்டஷுமியே  வா!“ உள்ளிருக்கும் போது அழைத்தவர்

வெளிவந்ததும்

"வந்ததும் வந்தாய் வெள்ளையாய் வந்திருக்க கூடாதா ? "என்றர்.

மீண்டும் உள் சென்று விட வேண்டும் போலிருந்தது எனக்கு.

 

"கருப்பாய் இருந்தாலும் என் மகள் கலையாய் இருக்கிறாள்"

அம்மா எனக்கு ஆறுதல் சொன்னாளா

தனக்கு சொல்லிக்கொண்டாளா

இன்று வரை விளங்க வில்லை எனக்கு.

 

இதையும் அதையும் தேய்த்தால் நிறம் வரும்

வந்தவர் போனவர் எல்லாம் சொல்ல

குறையுள்ள குழந்தையை பெற்றது போல் குமுறினாள் அம்மா.

பிழையுடன் பிறந்ததாய்  நம்பினேன்.

கருப்பை கரைக்கும் சக்தி  மட்டும்  கண்ணீருக்கு  இருந்திருந்தால்

என் கன்னங்கள் இரண்டும்  செங்கிண்ணங்கள்   ஆகி இருக்கும்

நான் சிந்திய கண்ணீருக்கு.

 

நிழல் கருப்பாய் இருப்பது நிஜம்

நிஜம் கருப்பாய் இருந்தால் நிழல் கூட துணை நிற்பதில்லை

என்று கால போக்கில் கற்றுக்கொண்டேன்

 

பள்ளி விழா நாடகமொன்றில் 

இயலென்பது எனக்கு  இயல்பாய்  வருமாதலால்

அரசியாக்கினர் ஆசிரியர்.

ஒத்திகை போது என் உச்சரிப்பு சரியாயிருந்தும்

பார்த்தவரை நச்சரித்தது  எது என்று விளங்கவில்லை.

காரணமறியாது பணிநீக்கம் செய்யப்பட்டு

பணிப்பெண்ணாய் ஆக்கப்பட்டேன்.

புது அரசியின் சிம்மாசனத்தின் பின்  நிறுத்தப்பட்டு

சின்னதாய் உணரப்பெற்றேன்.

 

நடுக்கமில்லாத கால்கள் எனக்கு

நடனமாட ஆசை கொண்டேன்

செந்நிறம் கொண்டவர் முன் நிற்க  வேண்டுமாம்

எந்நிறம் கொண்டவர்  பின் நிற்க வேண்டுமாம்

கூறிய ஆசிரியரின் வார்தைகள் கூரிய

அம்பாய்  பாய்ந்தது பதின் பருவத்தில்

 

பெண் கேட்டு வந்தவர் எனை  பார்த்ததும்

பொன் கொஞ்சம் கூட கேட்டனர்

நல்ல மாண்பும் மனமும் இருக்க

துணையாய் பண்பும் படிப்பும் இருக்க

பொன்னெதற்கு புரியவில்லை எனக்கு

பொன்னிறம் இல்லாத குறையை பொன் போட்டு நிறை செய்யவாம்

விளக்கம் கிடைக்க பெற்றேன்.

 

சிறிய சிந்தனைகள்  சிந்தை சிதைக்கும் காலம் போய்

சிரிப்பை தூண்டும் பக்குவத்தை

பகுத்தறிவு கற்று கொடுத்ததால் சிந்தித்து பாக்கிறேன்

"சின்ன கண்கள்  கொண்டு பெரிய உலகம் காண்போருக்கு

பெரிய மனது கொண்டு  சின்னவைகளை  சிந்திக்க தோன்றுவது

என்ன ஒரு மானுடவியல் முரண்  என்று? "

 

நல்ல வேலை கண்ணகி இன்றில்லை

கருப்பாய் இருந்தாலும் அவள் கற்புக்கரசி என்றிருப்பார்கள்

"கற்பிற்கும் கலருண்டோ ?" என்று கலங்கி இருப்பாள் சிலம்பு நாயகி

 

மிருகதோலுரித்து ஆடை அணிந்த போது கூட மனிதன்

மனித தோலை பாகு படுத்த வில்லை.

வரலாற்று பக்க்கங்களை புரட்டி பார்க்கிறேன்

அழகையும் நிறத்தையும்  ஒரு கோட்டில் நிறுத்தம்

உதாரணம் ஒன்று கூட இல்லை.

பின் எங்கு நிகழ்ந்தது பிறழ் ?

பெண் வழி சமூகம் நாகரீங்களுக்கு நடுவில் மாறி போனதாலோ ?

பெண்ணில் வெண்ணிறம் வேண்டும் கண்கள்

ஆண் எண்ணிறமானாலும் ஏற்றுக்கொள்கிறதே !

 

கண்ணா!  கார் முகில் வண்ணா

உனை போற்றும் உலகம்

உன் நிறம்  கொண்ட பெண்டிரை

பண்புடன் ஏற்பதில்லை

திரௌபதி துயர் துடைத்தவனே

துகில் உடலிலிருந்து மட்டுமல்ல

உள்ளத்திலிருந்து உரித்தாலும் துன்பம் என்று அறிவாயா நீ

வருவாயா விரைந்து என் கேள்விக்கு விடை சொல்ல?

 

தாயாக நினைக்கிறேன்  நான்

ஏனோ கரு இல்லாமலே கனக்கிறது என் மார்பு

கருப்பு கண்ணிகை பிறந்தால் மீண்டும் ஒரு இருட்டு பயணமா ?

என்ன ஒரு பிற்போக்கான கேள்வி, கேட்டுக்கொள்கிறேன் என்னையே நான்

எந்நிறம் என்றால் என்ன நெஞ்சுரம் கொண்டவருக்கு

பொருட்டில்லாத பேச்சிற்க்கெதிராய்  போராட்டம் எதற்கு 

என் பாதையில் உன் பாதம் படாமல் பார்த்து கொள்வது

எனை போன்றோரின்   பொறுப்பு 

நீயாய் வந்தவள் நீயாக இரு ! நிமிர்ந்து இரு !

 

மற்றோருக்கு மொழி , எமக்கது வழி


பல் மொழி வித்தகனாம் ஒருவன் , தாய் மொழி தவிர 

பிழையா ? என்றான் ஒருவன்.


யாராரோ உற்றவராம் 

ஆராரோ சொன்ன பெற்றவள்  மட்டும் இல்லையாம் , குறையா ? 

கேட்டேன் நான்


„யாதும் ஊரே யாவரும் கேளிர்“ பாடியவர் தம் தமிழ் புலவர் என்றானவன்   


பாரெல்லாம்  ஊர்  ; ஊரெல்லாம்  உறவு , தமிழ் பெருமகனார் சொன்னது பொய்யில்லை . ஆனால் தாய்மொழி  ஊரல்ல...உறவல்ல ..உயிரல்லவோ ?

ஊரது இலையாய் இருக்க உறவதன்   கிளையாய் இருக்க , தாய்மொழி வேர் போன்றது என்றேன் நான்  


வேருக்கு நீரூற்றுவோம்!!! 

அனைவருக்கும் எமது உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள்!