Wednesday, November 17, 2021

சரித்திர தேர்ச்சி கொள்


எச்சமயமும் மரணம் என்ற நிச்சயமற்றப்பயணத்தில் 

முடிவொன்றை இருப்பதை மறந்து  முடிவில்லா தேடல்கள்

 

மனிதா

சரித்திரத்தை சரியாய் அறிந்திருந்தால்

சரியாய் தவறுகள் செய்யமாட்டாய் .

வரலாற்று கல்லறைகள் சொல்லும் பாடம் கற்றால்

பொருளற்று போகாமல் இருக்கும் வாழ்க்கை பயணம்.

வரலாறு காணாத என்று சொல்வதை நிறுத்தி

வரலாற்றை நீ காண பயிற்சி கொள்.

 

சரிந்த சாம்பிராஜ்யங்கள் எல்லாம்

சரித்திரத்தை சரியாய் அறியாதவை.

பிண்ட பேதங்கள் கொண்டு அண்டம் ஆண்டவர்

வென்றதில்லை என்றும்

திண்ணமாய் சொல்லும் சென்றகாலம்

 

சலனிமில்லாமல் சற்றே சிந்தித்து பார்

சரித்திரம் சொல்லும் சத்தியம் விளங்கும்

கண் காணா துளியில் இருந்து உதித்தவன் நீ

கால சுழற்சியில் காணாமல் போகும் துரும்பு நீ

புனைந்த  பொருளுரை  பொருளற்று போனதை

மூப்பில் முடிவுரை வரையும் வரை அறியா

தவறை செய்யாதிரு .

மூளை மடிப்புகளுக்கெட்டாத ஆச்சர்யங்கள்

மனித நாகரீகங்களின் மடியில் மறைந்து இருக்கின்றன

கற்பனைக்கெட்டாத கருத்து கருவூலங்கள்

வரலாற்று புரட்சிகளுக்கடியில் புதைந்து கிடக்கின்றன

 

நேற்றிடத்தில் விதை வாங்கி

இன்றைய வெற்றிடத்தில் புதை

விளையும் நாளை போற்றிடும் உன்னை.

 

மனிதத்தை மறக்க செய்யும் மரபுகள் மற

சமத்துவம் துறக்க துணியும்  சட்டங்களை சாடு

பழுதான எண்ணங்களுக்கு  பழைய  வரலாற்று பக்கங்களில் பதில் தேடு 

சிதறிய சிந்தையை சரித்திர கோலால் சீர் செய் 

நெறிமுறைகள் பழக வரையறைகள் தேவை இல்லை

 

 

முழு மதி தேய்வதும் பிறைநிலா வளர்வதும்

இயற்கை சொல்லும் பாடம்

வாழ்ந்தவர் வீழ்வதும் தாழ்ந்தவர் எழுவதும்

வரலாறு சொல்லும் வேதம்

 

ஊனது மண்ணுக்கிரையாகும்  வரை

உனது எண்ணம் கோணாதிரு

சரித்திரமாய் நீ  வாழ்ந்து விட்டால்

பின் உன்னை தேர்ச்சி கொள்ளும் உயிர்கள்

மண்ணில் தானாய் முளைக்கும்

 

No comments: