Thursday, July 8, 2021

வாழ்வியல் சொல்லும் விழாக்கள்

 

கொளுத்தும் வெயிலில் கோடை மழை போல

வற்றி போன குளத்தில் ஒற்றை தாமரை போல

இறுக்கமான சூழலில் அமைந்த இந்த கவி அரங்கின் மூலம்

 

நைந்து கிடக்கும் நம்பிக்கை நறும்புகளில்

நற்றமிழ் பாய்ச்சி புத்துயிர் தருவோம்

களைத்து கிடக்கும் இதய நாளங்களை

கவிதை சொல்லி இளைப்பாற அழைப்போம் .

 

தாளும் கோலும் களவி கொண்டதால்

பிறந்த என் கவிதை குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா

---------------------

 

இயல் இசை நாடகம் - முத்தமிழை போற்றும் எம்

விழாக்களை பற்றி எத்தனை முறை சொன்னாலும் தெவிட்டாது .

 

சந்தோஷத்திற்கு விழா சங்கடத்துக்கு விழா

பக்திக்கு விழா பயத்துக்கும் விழா

உழவுக்கு விழா எழவுக்கும் விழா

சாமிக்கு விழா சவத்துக்கும் விழா

நாங்கள் வித விதமாய் விழா  வித்தை அது

விடிய விடிய சொன்னாலும் முடியாது

 

 கத்திரி வெயில் சித்திரையோடு முடிய

 வரமொன்று  வழங்க வைகாசி விடிய

 விசாகம் வந்தது விஷேஷமல்ல

 அழகான வேலவன் , தமிழ்க்குடியின் மூலவன்

 முருகனவன் பிறந்தது முத்தாய்ப்பானது

 வீரவேலவனை போற்றும் விஷேஷ விழா , விசாக திருவிழா

 

விண்ணில் முட்டிக்கொண்ட மேகங்கள்

மண்ணில் இட்டுக்கட்டி மெட்டு போட

விதைத்த நிலம் விளைந்து நிற்க

உழைத்த களைப்பு களைந்து போக

கண்டாங்கி சேலையும் கண்ணாடி வளவியும்

கும்மிக்கும் குலவிக்கும் ஒன்று கூடி

இல்லாத அடுப்பை கல்லால் கூட்டி ,

உலை கொதிக்க

கலை கட்டும் எங்கள் உழவுதிருவிழா

 

வேலிக்குள் ஜல்லிக்கட்டு காளையது  சீறி பாய்ந்து தேகம் கிழிக்க

வேல் விழியாள் வெளியில் இருந்து அதை சேர்த்து தைக்க

அடங்க மறுப்பது காளையா ? என் காதலா ?

தைப்பது நீ என்றால் நான் சல்லி சல்லியாய்

போகும் வரை தொடரட்டும் இந்த ஜல்லி கட்டு

ஏங்கும் எங்கள் காளையரின் வீரத்தையும்

காளைகளின் வீரியத்தையும் சொல்லும்

இந்த மாட்டு விழா எங்கள் வீட்டு விழா

 

 

மழையால் நீங்கிய மாசு விசும்பின்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர

அகநானூறு போற்றும் அகல் விழா

இன்றும் வழக்கில் இருக்கும் விளக்கு  விழா

என்ன தான் தேய்த்து தீர்த்தாலும்

சட்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும்

கெட்டியான  மீன் வாசம் போல ,

வீறு கொண்டு  எழுந்த கார் மேகம் எல்லாம்

ஒன்று கூடி ஒப்பாரி வைத்து சோதித்தாலும்

சாதித்து நிற்கும் இந்த  கார்த்திகை ஜோதிகள்

 

ஈராறு மாதங்களை  மட்டுமல்ல

ஊராரும் உறவாறும் சேர்ந்து

உறவின் வரவை , வரவின்  உறவை

பிரிவில் துணிவை, துணிவின் பிரிவை

அழுத்திச்சொல்லும்

அறைந்து சொல்லும்

 அர்த்தமுள்ள விழாக்கள் , எங்கள் குடும்ப விழாக்கள் 

 

பூப்படைந்த புது மகளுக்கு

மாமன் நடத்தும் மஞ்சள் விழா

ஊரும் உறவும் ஒன்று கூடும்

திருமணம் என்னும் பெருவிழா

எத்துனை  துயரிலும்

புத்துயிரொன்றை பத்து திங்கள்

சுமப்பவளுக்கு சீமந்த விழா

ஓட்டை போட்டால் நிரம்பும்

குடமுண்டோ

தமையனின் மடியில் அமர்ந்த

தனயனின் காதுகள் துளைக்க

நிரம்பும் பெற்றவளின்  உள்ள குடம்.

காதணி விழாவிற்கு இம்மேதினியில் ஈடுண்டோ

அழகென்ற சொல்லுக்கு முருகன், அறிவோம் நாம்

அமைதி என்ற சொல்லுக்குum முகமுண்டு என்பேன் நான்

பாதியில் மாறிய பாதை ,போதியில் முடிய

பாருக்கு புது பாடம் சொன்னவன் புத்தன்.

அக்கருணை முகத்தை ஓரப்பார்வை

பார்த்தாலும் ஒட்டிக்கொள்ளும் அமைதி

புத்தர் பிறந்த வைகாசி

இத்துயருக்கு முடிவாய் இருக்கட்டும்

 

இறுதியாய்

உள்ள பள்ளங்களை உவகையால்

நிரப்பும் விழாக்கள் பழகுவோம்

சாதி மறந்து சமத்துவம் பழகும் விழாக்கள்

மதம் மறந்து மனிதம் பழகும் விழாக்கள்

பிரிவினை மறந்து பரிவினை பழகும் விழாக்கள்

 

மனிதம் என்னும் மையால் ,  எண்ண தூரிகை வண்ணம் கொண்டால்

வாழ்க்கை காகிதம் வானவில் ஆகும் ... இந்நாள் போல் ...எந்நாளும் திருவிழா காணும்

 

வாய்ப்பு நல்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி !

No comments: