Monday, December 13, 2021

திறவுகோல்

 

ஈராறு உயிரில்லாது மூவாறு மெய்க்கு பொருளேது

அறிவோம் நாம் !!

 

பாரார் பாடும் பாரதியும் ஊரார் போற்றும்  நம்  நடுவரும்

நாமாறு பேரும் இல்லாது

இம்ம் மெய் நிகர் மேடைக்கு பொருளில்லை என்பேன் நான்

 

தமிழ் பால் நீங்கா  காதல் கொண்ட கவிஞர்களுக்கும்

தமிழே காதல் கொண்ட நம் நடுவர் திரு அப்துல் காதர் அய்யா 

அவர்களுக்கும் வந்தனங்கள்!

என் தாலும் கோலும் களவி கொள்ள perum காரணமானவன்

கண்ணம்மாவின் கண்ணாளனை

எண்ணாது முடியாது இம்முன்னுரை 

 

தமிழறிவை வரவாக்கி மணித்துளியை செலவாக்கி

கற்பனை கற்களால் கட்டிய என் கவிக்கோவிலுக்கு  இன்று திறப்பு விழா

 

இதோ திறவு கோலை

தலைமையிடம்  தருகிறேன்

வீடுகளும் நாடுகளும் தாழிட்டு இருக்க

திறவுகொலென்னும் தலைப்பில் கவிதை

திறக்க மறுத்து சிரிக்கிறது என்னுடன் சேர்ந்து என் எழுது கோல்

அத்தாழ்களை இல்லையென்றாலும் 

இத்திறவுகோல் தம் இதய தாழ்களை திறந்து

ரத்த நாளங்களுக்கு புத்துயிர் தரும்

என்ற நம்பிக்கையுடன் இதோ நான் !!

 

முத்துக்களாய் நீரது மண்ணில் சிந்த மூடிய முகில்களை திறப்பது  யார்

கொத்து மல்லிகை மனம்   வீச குவிந்த மொட்டுக்களை திறப்பது யார்

புத்தம் புது புல்லொன்று புவி காண  புதைந்த விதையை திறப்பது  யார்

செத்து பிழைத்து ஈன்ற சேயது அழ  தாயாவளின் முலைகளை  திறப்பது  யார்

நித்தம்  சென்றுவரும் சுவாசம் மொத்தமாய் செல்லும் நொடி உயிர்க்கூட்டை திறப்பது யார்

முந்திச்சென்ற விந்து வாசல் வந்து நிற்க கருப்பை கதவை திறப்பது யார்

கெட்டியான இருட்டும் சட்டென்று அகல அக கண்களை திறப்பது யார்

மனமது மகிழும் பொழுதும் நெகிழும் பொழுதும் கண்ணீர் குடங்களை திறப்பது யார்

கடும் பாறையதன் தேகத்தை சிறுவேறொன்று துளைக்கிறது

சுடும் சூரியனின் கதிரது பெரும் சமுத்திரத்தை கிழிக்கிறது

கண்ணில் தெரியாத வைரஸ் தேகம் துளைப்பதால்

இன்று விண்ணில் பறந்த  விமானங்கள்  நின்று போனது

 

Omicron உட்பட திறவுகோலன்றி திறம்பட  திறக்கும் தாழ்கள் 

விஞானத்திற்கும் விளங்காத விந்தைகள்.

எனில் திறவுகோளென்ன  திறனற்றதா  ?

ஐயோ

இதென்ன என் தலைப்பிற்கு வந்த சோதனை

கலையால் கவியரங்கம் கலை இழப்பதோ

மூளை மடிப்புகளை முழுதாய் திறந்து

சற்று சிந்தித்து பார்த்து

சத்தியம் விளங்க பெற்றேன்

 

படைத்தவன் புலப்படாதல் படைப்புகள் பொய்யாவதில்லை

இறைவன் அகப்படாததால்  அவன் இருப்பு இல்லாமலில்லை

முன்நிகழ்வின்  முடிவது இந்நிகழ்வின் திறவுகோல் 

என்ற உண்மை தெளிய பெற்றேன் 

நேற்றென்பது இன்றைய திறவுகோல்

இன்றென்பது நாளைய திறவுகோல்

 

பல் இலக்கியங்களுக்கு நல் இலக்கணம் திறவு கோல்

ஏகாந்தத்தின் அமைதி தத்துவங்களின் திறவு கோல்

நிறைவற்ற மனம் பேராசையின் திறவுகோல்

விடியும்  முன் காணும் கனவுகள் பல விடியல்களின் திறவுகோல்

கொடும் பகைக்கு கடும் அறியாமை திறவுகோல்

இருப்பவனின்  அகந்தைக்கு இல்லாதவனின் இயலாமை திறவுகோல்

நீ புனையும் பொருளுரை மூப்பில் உன்  முடிவுரைக்கு திறவுகோல்

ஆண்மையது பெண்மையின் திறவுகோல்

ஆன்மாவது உண்மையின் திறவுகோல்

பூட்டியிருப்பவைக்கு விடுதலை திறவுகோல்

விடுப்பட்டவைக்கு பூட்டல்லவோ திறவுகோல்

 

இயற்க்கை இதனை இயல்பாய் இயக்க

செயற்கை சிறைகள் ஏன் ??

உடைக்க பட வேண்டிய கதவுகளும்

உதைக்க பட வேண்டிய கதவுகளும்

உருமாறி உலவிக்கொண்டிருக்க


சாம்பல் நிறத்தொரு குட்டி,

கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி,

பாம்பின் நிறமொரு குட்டி,

வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்

அவை யாவும் ஓரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும்

இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்

அதில் மானுடர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

 

எட்டயபுரத்தானின் எண்ணங்களை

கட்டிபிடிக்கவில்லை என்றாலும் எட்டி பிடிக்க முயல்வோம்  !!

 

பஞ்சமில்லாத நெஞ்சுரம் கொண்டவனை

அச்சம்தனை துச்சமாய் எண்ணியவனை எண்ணத்தில் பூட்டுவோம்

சாதிசிறையில் அடைந்திருக்கும் சிந்தையை

பகுத்தறிவு பட்டறையில் சாவி வாங்கி மீட்டெடுப்போம்

 

மதசங்கிலியால் பூட்டிக்கிடக்கும் மனக்கதவுகளை மனிதமென்னும் திறவுகோல் திறக்கட்டும்

சமய  சணலால் கட்டுண்டு கிடக்கும் சித்தத்தை சமத்துவமென்னும்

திறவுகோல் திறக்கட்டும்

 

வாய்ப்பு நல்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி!


 

No comments: