Wednesday, July 22, 2020

மனிதத்தையன்று


பாத சுவடுகள் இல்லையென அலைகள் ஓயவில்லை
மனித அரவம் இல்லையென மலைகள் சரிய இல்லை

மாசும் தூசும் இல்லையென மரங்கள் மடியவில்லை
இரைச்சல் இல்லையென பறவைகள் பதுங்க இல்லை

விமானங்கள் இல்லையென விண்மீன்கள் விம்மவில்லை
பயணங்கள் இல்லையென பாதைகள் முடியவில்லை

பக்தர்கள் இல்லையென படைத்தவன் உறங்க வில்லை
பூஜைகள் இல்லையென  பண்டிகைகள் கலங்கவும் இல்லை

கல்லறைகள் நிரம்பி வழிந்தாலும் மலர்கள் மலர தான் செய்கிறது
மனித மனமது இருண்டாலும் காலை கதிர் உதிக்க தான் செய்கிறது
நித்திரை தொலைந்த இரவாயினும் நிலவொளி வீசத்தான் செய்கிறது
நகராத பொழுதெனினும் பௌர்ணமியும் அமாவாசையும் முடிந்து தான் போகிறது

புவியதன் இயக்கம்  இயல்பாய் தொடர
மயக்கம் தெளிந்தவன் மானுடன் தானோ ?

"நானே" என்றெண்ணிய அகந்தையை
நுண்ணுயிர் ஒன்று மண்ணோடு மண்ணாக்கியது

கண்ணில் தெரியாத வைரஸ் ஒன்று
விண்ணில் பறந்த விமானங்களை பிடித்து நிறுத்தியது

சாதி மதம் என்றும் பிரிவினை என்றும் பிதற்றிய பித்தர்களுக்கு
தொற்றொன்று சத்தம் இல்லாமல் சமத்துவ பாடம் சொல்லி கொடுத்தது

தீண்டாமை பேசி வந்த தீயோரை   இன்று
சிறு உயிர் ஒன்று தீண்ட தகாதவராய் மாற்றியது

“”அண்டம் ஆளும் வல்லரசுகள் நாங்கள்” என்ற இறுமாப்பை
சின்னஞ்சிறு  கிருமி  ஒன்று சின்னாபின்னமாக்கியது

இன்றளவும் இத்துயருக்கு நம்மிடம் மருந்தில்லை
நாளை தீர்வொன்று வரலாம், எனினும்

இன்று துளியில் வரும் தொற்று
நாளை காற்றில் வரலாம்
நாசி வழி சுவாசம் சென்று திரும்பும்
நேரம் கூட பாரமாய்  மாறலாம்
கற்பனைக்கெட்டாத கேடொன்று கருவிலிருந்தே தொடரலாம்


மனிதா.....
உன்னை உழல வைப்பது பிரபஞ்சம் என்றுணர்
பிரபஞ்சத்தை சுழல வைப்பது நீயன்று

விதியது வீரு கொண்டு எழுந்தால்
மதி சொல்லும் விஞ்ஞானமும் வீணாய் போகும் என்றுணர்

பணிவென்னும் பண்பு கொள்
நான் மட்டும் என்ற ஆணவம் துறந்து
நானும் என்று இயற்கையுடன் இணக்கம் கொள்

எக்கிருமியும்  மனிதனையே வதைக்க இயலும்; மனிதத்தையன்று ;
மனிதத்தை மனிதனால் மட்டுமே கொன்று புதைக்க இயலும்

மதி கொண்டு விதியை வெல்லலாம்  என்றது பழமொழி
மனிதம் கொண்டு எதையும் வெல்வோம் என்பது புது மொழியாகட்டும்

நம்மை பணிய வைத்த  பிணியிடமிருந்து பாடம் பயில்வோம்!
பழைய பூமியில், புதிய மனிதராய் பயணம் தொடர்வோம்!!

                                                                           -    கலை அரசி முருகேசன்

No comments: