Monday, October 26, 2020

போதியின் கீழ் பேதையவள் ..

 

எழும் அலை எல்லாம்

கரை காண்பதில்லை

கரை காணும் அலையாவும்

கதை கேட்பதில்லை

 

விழும் மழை எல்லாம்

நிலம் சேர்வதில்லை

நிலம் சேரும் நீரெல்லாம்

வேர் நனைப்பதில்லை

 

துளிர்க்கும் மொட்டெல்லாம்

மலர்ந்து மகிழ்வதில்லை

மலரும் மலரெல்லாம்

மகரந்தம் தருவதில்லை

 

சிந்தும் கண்ணீர் எல்லாம்

சோகம்  கரைப்பதில்லை

கரைந்த சோகம் எல்லாம்

மறைந்து போவது இல்லை

 

கற்பனைக்கெட்டியது எல்லாம்

கலையாவதில்லை

கலையானவை எல்லாம்

நிலை கொள்வதில்லை

 

உதிர்ந்த உதிரம் எல்லாம்

உயிராய் உறைவதில்லை

உறைந்த உயிரெல்லாம்

கருவில் உரு பெறுவதில்லை

வேட்கை கொண்டதெல்லாம்

வாழ்க்கை ஆவதில்லை

நினைத்தவை எல்லாம்

நிறைவேறுவதில்லை

 

பொருளொன்று இல்லாது

படைப்பொன்று கிடையாது

நோக்கமன்று  இல்லாது

நிகழ்வொன்று நடவாது

 

மெய்யதை  உணராது

பொய்யான தேடல் ஏன்

எச்சமயமும் மரணமென்ற

நிச்சயமற்ற இப்பயணத்தில்

 

இலக்கென்பது பொய்

இன்றென்பதே மெய்

Tuesday, October 20, 2020

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்

வான் நிலவே…… வளர் பிறையே

புல் வெளியே…….  வெண் பனி மழையே

 

இயங்கிய காலம் உறங்கி கிடந்து

மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து ....

இருக்கும் போது மறந்த உண்மை

இறக்கும் போது உணர பெற்ற

 

கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா

கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா

 

கருப்பை விடுத்த நொடி முதல்

இருப்பை தேடி திரியும் உலகில்

 

தவழ்ந்து துவண்டு

எழுந்திட தவிப்பு

 

நின்று வென்றதும் 

நடந்திட தவிப்பு

 

ஓரடி  வைத்ததும்

ஓடியாட தவிப்பு

 

மூப்பது தொடங்கும்  வரை 

தவிப்புகள்  முடியவில்லை

 

முடிவொன்று இருப்பதை மறந்து

முடிவில்லா ஆசைகள் கொண்ட என்  (கதை……)

 

சுமந்த மடியில் ,விழுந்த நொடி முதல்

வென்றிட முயன்றேன்

 

மழலையாய் அழுகை கொண்டு

பசியை வெல்ல

 

மூவாரில் காமம்   கொண்டு

காதல்  வெல்ல

 

முதுமையில் பொறுமை கொண்டு

வெறுமை வெல்ல

 

வென்று முடிக்கும் வேகத்தில்

கொன்று புதைத்தேன் வாழ்வதனை

 

புனைந்த பொருளுரை பொருளற்று போனதை

மூப்பில் முடிவுரை வரையும் போது உணர பெற்ற (கதை ……)


தண்ணிய தேடுற தரிசு நெலம்

 

முக்கடலின் சந்திப்புல முத்தா ஒரு ஊரு

முன்னோரின் கலைய சொத்தா  பாக்குற ஊரு

வீரமும் தீரமும் மண்ணோடு உறைஞ்ச ஊரு 

ஆட்டமும் பாட்டமும் பண்பாட்டுல  கலந்த ஊரு.

 

 தித்திக்கும்  தமிழ் பேசுற தென்னாடு ;

 நாட்டுப்புற கலையில தல சிறந்த எங்க தமிழ்நாடு

 

காதல கதையா, களவிய கவிதையா

வீரத்த நாடகமா ,வெற்றிய ஆட்டமா

நாகரீகத்த நயமா நாலு பேருக்கு சொன்ன கூட்டம்.

 

சந்தோஷத்துக்கு பாட்டு, சங்கடத்துக்கும் பாட்டு

உழவுக்கு ஆட்டம்  எழவுக்கும் ஆட்டம்

துக்கத்துக்கு பாட்டு,  தூக்கத்துக்கும்  பாட்டு

சாமிக்கு ஆட்டம் , சவத்துக்கும் ஆட்டம்.

பக்திக்கு  ஆட்டம்,  பயத்துக்கும் ஆட்டம்

வித விதமா  கலை பழகும்  வித்தையது

விடிய விடிய சொன்னாலும் முடியாது


மண்ணுல  விதைச்சது 

பொன்னாக வெளைஞ்சு நிக்க 

கண்ணுல வரும் சந்தோசத்த

கூத்தாடி கொண்டாடும்  கூட்டம்

 

மெய்யெல்லாம் சிலிர்க்க வெக்கும்

கட்டையில ஏறி நாங்க ஆடுற  பொய் கால் குதிரையாட்டம்

 அழகான கொடத்தை அலுங்காம தலையில  வெச்சு

எழிலாக அசஞ்சு வந்தா கரகாட்டம்

 மஞ்ச கருப்பு பட்ட போட்டு நாங்க ஆடும் புலியாட்டம்

பாஞ்சு வரும் புலிய கூட பக்குவமா  பதுங்க செய்யும்

 

வீராதி வீரன் கதையெல்லாம்

சொல்லோடு சுதி சேத்து, வில்லுல தட்டி பாட

சோறு தண்ணி மறந்து போகும் ; சோகம் எல்லாம் ஓடி போகும்

 

 தப்பு தப்பா இல்லாம தாளத்தோட

தப்பாம ஆட வெக்கும் தப்பாட்டம்

 ஒத்த கோலு  சுத்தி வந்து வீரம் சொன்னா சிலம்பாட்டம்

ரெட்டை கோலு தட்டி சந்தோசத்த சொன்னா கோலாட்டம்

 

மனுசங்க ஆடுற ஆட்டம் எல்லாம் பத்தாதுன்னு

மாடாட்டம் ஆடுவோம்; மயிலாட்டம் ஆடுவோம்

 

வட்டமா ஒன்னு கூடி  வகையா கை தட்டி

பெட்டையெல்லாம் ஆடிவர 

கூடி போகும் கூட்டம் எங்க கும்மியாட்டம் பாக்க

 

தடையில்லா  பாதையில, தளராத பயணத்துல

நடந்து போகையில, நறுக்குன்னு முள்ளு குத்துனது போல,

நேத்து வந்த கூத்தெல்லாம் வெனையா வந்து சேர

பாத்து பாத்து வளத்த கலையெல்லாம் காத்துல காணாம போவுது.

பாட்டா கூத்தா பொழப்ப சொன்ன கூட்டத்தின்

பொழப்பின்னைக்கி   பெரிய  கூத்தாகி போச்சு .

வண்ணம் பூசி எண்ணம் சொன்னவுக  

கண்ணெல்லாம் வத்தாத கொளமாகி போச்சு.


வண்ண வண்ணமா இருந்தாலும் வாடாமல்லிக்கு வாசமில்ல

மனுச பொழப்ப சொல்லும் கலைக்கு ஈடு இணை எதுவுமில்ல

மண்ணு வாசம் பேசுறவுக பொழுப்புல மண்ணு விழாம

மகத்தான வரலாறு மரிச்சு போகாம 

நட்டு வெச்ச செடி பட்டு போகாம பாக்குறது போல

நம்ம   நாட்டுப்புற கலைய காக்க நல்லதா ஒரு முடிவெடுப்போம் .

Wednesday, July 22, 2020

மனிதத்தையன்று


பாத சுவடுகள் இல்லையென அலைகள் ஓயவில்லை
மனித அரவம் இல்லையென மலைகள் சரிய இல்லை

மாசும் தூசும் இல்லையென மரங்கள் மடியவில்லை
இரைச்சல் இல்லையென பறவைகள் பதுங்க இல்லை

விமானங்கள் இல்லையென விண்மீன்கள் விம்மவில்லை
பயணங்கள் இல்லையென பாதைகள் முடியவில்லை

பக்தர்கள் இல்லையென படைத்தவன் உறங்க வில்லை
பூஜைகள் இல்லையென  பண்டிகைகள் கலங்கவும் இல்லை

கல்லறைகள் நிரம்பி வழிந்தாலும் மலர்கள் மலர தான் செய்கிறது
மனித மனமது இருண்டாலும் காலை கதிர் உதிக்க தான் செய்கிறது
நித்திரை தொலைந்த இரவாயினும் நிலவொளி வீசத்தான் செய்கிறது
நகராத பொழுதெனினும் பௌர்ணமியும் அமாவாசையும் முடிந்து தான் போகிறது

புவியதன் இயக்கம்  இயல்பாய் தொடர
மயக்கம் தெளிந்தவன் மானுடன் தானோ ?

"நானே" என்றெண்ணிய அகந்தையை
நுண்ணுயிர் ஒன்று மண்ணோடு மண்ணாக்கியது

கண்ணில் தெரியாத வைரஸ் ஒன்று
விண்ணில் பறந்த விமானங்களை பிடித்து நிறுத்தியது

சாதி மதம் என்றும் பிரிவினை என்றும் பிதற்றிய பித்தர்களுக்கு
தொற்றொன்று சத்தம் இல்லாமல் சமத்துவ பாடம் சொல்லி கொடுத்தது

தீண்டாமை பேசி வந்த தீயோரை   இன்று
சிறு உயிர் ஒன்று தீண்ட தகாதவராய் மாற்றியது

“”அண்டம் ஆளும் வல்லரசுகள் நாங்கள்” என்ற இறுமாப்பை
சின்னஞ்சிறு  கிருமி  ஒன்று சின்னாபின்னமாக்கியது

இன்றளவும் இத்துயருக்கு நம்மிடம் மருந்தில்லை
நாளை தீர்வொன்று வரலாம், எனினும்

இன்று துளியில் வரும் தொற்று
நாளை காற்றில் வரலாம்
நாசி வழி சுவாசம் சென்று திரும்பும்
நேரம் கூட பாரமாய்  மாறலாம்
கற்பனைக்கெட்டாத கேடொன்று கருவிலிருந்தே தொடரலாம்


மனிதா.....
உன்னை உழல வைப்பது பிரபஞ்சம் என்றுணர்
பிரபஞ்சத்தை சுழல வைப்பது நீயன்று

விதியது வீரு கொண்டு எழுந்தால்
மதி சொல்லும் விஞ்ஞானமும் வீணாய் போகும் என்றுணர்

பணிவென்னும் பண்பு கொள்
நான் மட்டும் என்ற ஆணவம் துறந்து
நானும் என்று இயற்கையுடன் இணக்கம் கொள்

எக்கிருமியும்  மனிதனையே வதைக்க இயலும்; மனிதத்தையன்று ;
மனிதத்தை மனிதனால் மட்டுமே கொன்று புதைக்க இயலும்

மதி கொண்டு விதியை வெல்லலாம்  என்றது பழமொழி
மனிதம் கொண்டு எதையும் வெல்வோம் என்பது புது மொழியாகட்டும்

நம்மை பணிய வைத்த  பிணியிடமிருந்து பாடம் பயில்வோம்!
பழைய பூமியில், புதிய மனிதராய் பயணம் தொடர்வோம்!!

                                                                           -    கலை அரசி முருகேசன்