விளக்கென்பர்,
உன்னை குல விளக்கென்பர்
விளக்காய்
இருந்தாலும் விதி விலக்காய் இருக்க
தயங்காதே !!
வேரென்பர்
உன்னை ஆணி வேரென்பர்
வேராய்
இருந்தாலும் வேறேதும்
வாழ்க்கையில்லை என்றெண்ணாதே !!
மலரென்பர் உன்னை
அழகிய மலரென்பர்
மலராய்
இருந்தாலும் தளராதிருக்க தவறாதே!!
மெல்லினம் என்பர் மெய்களில் மெல்லினம் என்பர்
உண்மையில் உயிரினங்களில் உயிரினம் நீ என்பதை மறவாதே!!
பெண்ணடிமை பழைய கதை
என்னடி இது பிதற்றல் என கேட்க தூண்டும் வரிகள்....அல்லவா??
உண்மையில் பிதற்றலாய் இருந்தால்
ஊனமுற்றது என்
சிந்தையென ஆகட்டும்
எத்தனை சாதனை சட்டை பையில் இருந்தாலும்
அத்தனையும் மறந்து
அளவுகளாகவும்
வளைவுகளாகவும் மாத்திரம் pennai
சித்தரிக்கும்
பித்தர்கள் இருக்கும் வரை
சம உரிமை என்பது
அரசியல்
வாதிகளின் தேர்தல் வாக்குறுதி போல்... ஏட்டிலே மட்டுமே நிலை கொள்ளும் உண்மை
ஒரு கருப்பையில் இருந்து வந்தவன்
தன்னுறுப்பால் சின்னஞ்சிறு கருப்பைகளை சிதைக்கும்
சித்ரவதை நிகழும் வரை எவ்வளவு பெண்ணியம் பேசியும்
எள்ளளவும் புண்ணியம்
உண்டோ
அவ்வளவு
ஏன், மகளிர் விழாக்களை பெரும்பான்மையாக மகளிர்
மட்டுமே சிறப்பிக்கும் வரை
கலைந்தன பாலின
பேதங்கள் என்பது
வெறும் பாலை வன
கானல்கள்
அடுப்படி
பெண்ணுக்கே
என்று இன்றும் எண்ணுவோருக்கு
உன் இடுப்பெலும்பின்
உறுதி தெரிய
பிறவி ஒன்று போதாது
உதிரம்
உதிர்த்து உயிர் வளர்த்து
உலகம்
உழல செய்யும் சக்தி நீ
ஆகவே பெண்ணே!!
கற்பும்
கண்ணியமும் ஒழுக்கமும் ஓம்பலும்
பெண்ணுக்கு
மட்டும் என்று பிற்போக்கு பேசும் கூட்டத்திற்கு
புற
முதுகு காட்டுவது புறநாநூறு
கூறாத புது
வீரம் என்றுணர்!!
பாலினம்
இரண்டென்பது இறைவனின் விதி
இரண்டாம்
பாலினம் என்பது இடையில் நடந்த சதி
இச்சதி
அறிந்தே பாட்டன் பாரதி அன்றே பாடினான்
“ஆணும்
பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர
சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின்
குணங்களாம்;”
முண்டாசு
கவிஞனின் கனவு
பாதி பலிக்க அரை நூற்றாண்டு ஆகி விட்டது
முப்பாதியில்
முற்பாதையை கற்பாதையாய் மாற்றிய பெண்களையும் துணை நின்ற ஆண்களையும் மனதில் நிறுத்தி
பிற்பாதி பயணத்தை
உறுதியாய் ஒற்றுமையாய் தொடர்வோம் !!
... முரட்டு அலைகள் சூழ்ந்த பயணமாயினும் கலங்கரை விளக்கம் தென் பட்டு விட்ட தெம்பில் … நம்பிக்கை துடுப்பெடுத்தால் …. சம உரிமை போராட்டம் கரை காண்பது திண்ணம்