உன் அடுக்களை பானையில்
என் உலை கொதிக்காதோ
உன் மாடி தோட்டத்தில்
என் மல்லிகை மலராதோ
உன் வீட்டு வாசத்தில்
என் சுவாசம் சேராதோ
உன் தலையணை மடிப்பில்
எந்தன் மயிரிழை இழையாதோ
உன் விடியாத இரவுகள்
என் நாணம் காணோதோ
உன் தாய்மையின் பாரம்
என் மடி உணராதோ
உன் மங்கள திலகம்
என் நெற்றி சேராதோ
என்னவன் என்றெண்ணியவனை
தன்னவனாய் கொண்டவளே
பெண்ணிவளின் நோவதனை
நீயறிய நியாயமில்லை..
பிரிந்து போன பின்னாலும்
பின்னி கிடக்கும் நினைவுகள்
கலைந்து விட்ட பின்னாலும்
கண்ணில் நிற்கும் கனவுகள்
விலகி விட்ட பின்னாலும்
அகல மறுக்கும் ஏக்கங்கள்
விழி நான்கும் கண்ட ஒற்றை கனா
தடம் மாறி போன பின்
விரல் கோர்த்து பேசிய காதல் மொழி
கானலென ஆன பின்
கற்பனை செய்து காயம் ஆற்றி கொள்கிறேன் .
என் காதலனை உன் கணவனாக்கிய
காலத்தை நொந்து கொள்கிறேன்
தொடங்கிய கவிதை முடிவதற்குள்
தொலைந்து போனது என் பேனா
முடியாத என் கவிதையை
விடியாத இரவுகளுக்கு பரிசாக்கி விட்டேன்
கால சுழற்சியில் வாழ்க்கை பழகி கொண்டேன்
இரவுக்கும் பகலுக்கும் இடையில் என் காதல் மறைக்க கற்றேன்
என் முன்னால் காதலனை
இந்நாள் கணவனாய் கொண்டவளே,
நானறிந்த உன்னவனை
நீயறிய வழியில்லை
நீயறிந்த என்னவனை
நானறியாமல் பார்த்துக்கொள்
திருமண பரிசாய்
திரும்ப தருகிறேன்
என் காதலை.
தாரைவார்த்தவனுடன் தாராளமாய் வாழ்ந்து விட்டு போ !